Published : 10 Nov 2023 08:25 PM
Last Updated : 10 Nov 2023 08:25 PM

ரசாயன நுரை பொங்கும் மதுரை கண்மாயைச் சுற்றி திரை: அதிகாரிகளின் விநோத நடவடிக்கை

மதுரை: மதுரை அயன்பாப்பாக்குடி கண்மாயில் வெளிவரும் ரசாயன நுரையை தடுக்க திரை போட்டு தடுப்பு வேலி அமைத்த மாநகராட்சி அதிகாரிகளின் விநோத நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் கடந்த காலத்தில் 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருந்தன. இந்த கண்மாய்களும், வைகை ஆறும் சேர்ந்துதான் மதுரை நகரை கடந்த காலத்தில் வளப்படுத்தின. தற்போது இந்த கண்மாய்களில் பெரும்பாலானவை நகர குடியிருப்புகளாக மாறி அந்த கண்மாய்கள் பெயரிலே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக தல்லாக்குளம், வில்லாபுரம், சொக்கிகுளம், பீபி குளம் உள்ளிட்ட பல கண்மாய், குளங்கள் நகர் விரிவாக்கத்துக்கு இரையாகி கண்மாய்கள் இருந்த அடையாளமே இல்லாமல் குடியிருப்பு பகுதிகளின் பெயர்களாக தற்போது அழைக்கப்படுகின்றன. கடந்த கால்நூற்றாண்டாக ஏற்பட்ட நீர்நிலைகள் விழிப்புணர்வால் தற்போது மீதமுள்ள கண்மாய்கள் பாதுகாத்து பராமரிக்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கண்மாய்களில் ரசாயன கழிவு நீர் கலப்பதையும், அதில் நிறைந்து இருக்கும் ஆகாய தாமரைச் செடிகளையும் அகற்றவும் பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் விளைவாக வைகை ஆறு முதல் மதுரை நகரின் பல கண்மாய்களில் இருந்து, அடிக்கடி ரசாயன நுரை பொங்கி வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது. தற்போது பெய்து வரும் மழைக்கு அயன்பாப்பாக்குடி கண்மாய் மறுகால் பாய்ந்த நிலையில், அந்த கண்மாய் பாசனக் கால்வாயில் இருந்து கடந்த 5 நாட்களாக ரசாயன நுரை வெளிவர தொடங்கியது. அதோடு அந்த நுரை காற்றில் பறந்து சாலைகளை நோக்கி வந்ததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த கண்மாய் பாசனக்கால்வாய் மதுரை விமானநிலையம் அருகே உள்ளதால், இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து விமானநிலையத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளதால் நுரையை அகற்றவும், ரசாயன நுரை வருவதற்கு காரணமான கழிவு நீர் இந்த கண்மாயில் கலப்பதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், 100-ஆவது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, கண்மாயில் இருந்து வெளியேறும் நுரை பொங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டு அந்த நுரை காற்றில் சாலையை போக்கி பறந்து வராதவாறு நுரைப்பொங்கும் கண்மாய் கரை, பாசன கால்வாய்கள் பகுதியில் திரை போட்டு தடுப்பு வேலி அமைத்து விசித்திர நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வைகை அணையில் நீர் ஆவியாகாமல் இருக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெர்மாகோல் விட்ட சம்பவத்தை தற்போது வரை சமூக வலைதளங்கள் முதல் சட்டசபை வரை கலாய்த்து வரும்நிலையில், தற்போது கண்மாயில் பொங்கும் நுரையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் நுரை வெளியே பொதுமக்களுக்கு தெரியும் இடங்களில் திரைப்போட்டு மறைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

கண்மாயில் கழிவு நீர் கலப்பதாகவும், ஆகாயதாமரைச் செடிகள் அதிகளவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கண்மாய் தண்ணீர் நுரையாக பொங்கி வெளியேறிக் கொண்டிருக்கிறது. கழிவு நீர் கலக்காதப்பட்சத்தில் ஆகாயத்தாமரையில் இருந்து பாசம் போன்று வெளியாகும் வேதிப்பொருளால் மறுகால் பாயும் போது நுரை எழும்புவதற்கு காரணமாக இருக்கலாம் என்று நீர்நிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபன் கூறுகையில், “அந்த கண்மாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவு நீர் கலக்கவில்லை. கண்மாயை சுற்றியுள்ள குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் கலக்கலாம். அதனை பொதுப்பணித் துறையும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும்தான் தடுக்க வேண்டும். நாங்கள் நுரைவெளியெறும் பகுதியில் திரைகட்டவில்லை” என்றார். அப்படியென்றால் கண்மாயில் இருந்து நுரைப் பொங்கும் பகுதியில் திரை கட்டியது யார் என்ற விவாதமும் சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x