Last Updated : 06 Nov, 2023 04:52 PM

 

Published : 06 Nov 2023 04:52 PM
Last Updated : 06 Nov 2023 04:52 PM

கழிவு நீர் குட்டையாக மாறிய கெலவரப்பள்ளி அணை: தூர்வார விவசாயிகள் கோரிக்கை

ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையின் நீர் தேக்கப்பகுதி கழிவு நீர் குட்டையாக காட்சி அளிக்கிறது. (அடுத்த படம்) கெலவரப்பள்ளி அணையிலிருந்து கருப்பு நிறத்தில் வெளியேறும் கழிவு நீர்.

ஓசூர்: கழிவு நீர் குட்டையாக மாறிய கெலவரப்பள்ளி அணையை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் கர்நாடக மாநிலம் நந்திமலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. தமிழக எல்லையிலுள்ள ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று இறுதியில் கடலில் கலக்கிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரம் 42.28 அடி. வலதுபுறம் 22.6 கிலோ மீட்டர் தொலைவும், இடதுபுறம் 32.5 கிலோ மீட்டர் தெலைவும் படர்ந்து உள்ளது.

இதன்மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்றில் அங்குள்ள குடியிருப்பு கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரும் கலந்து கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது, துர்நாற்றத்துடன். நுரை பொங்கியபடி வெளியேறுகிறது.

இதனால் அருகே உள்ள விளை நிலங்களில் ரசாயன நுரை படர்ந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் இந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் இந்த தண்ணீரில் குளிக்கும் பொதுமக்களுக்கு தோல் தொடர்பான நோய்களும் பரவுகின்றன. இதனால் கர்நாடக மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரை தடுக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து கருப்பு நிறத்தில் வெளியேறும் கழிவு நீர்

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி முதல் மதகுகளை சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. மேலும் அணைக்கு வரும் மழை நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது மதகுகள் சீரமைக்கும் பணி 70 சதவீதம் முடிவுற்ற நிலையில் உள்ளது. தொழிற்சாலை கழிவுகளால் அணை தற்போது கழிவு நீர் தேங்கி குட்டை போல் உள்ளது. மேலும் அணையின் நீர் தேக்கப்பகுதியில் ரசாயன படிமங்கள் படிந்துள்ளதை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் கேரட், முட்டைகோஸ், கீரை, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் அணைக்கு மழை நீரைவிட கழிவு நீரும், ரசாயன நீரும் தான் அதிகமாக வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிகப்படியான கழிவு நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள், கால்நடைகள், விளை நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் மண்ணின் தன்மை மாறி, விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லாமல் மலட்டுத் தன்மையுடனான மண்ணாக மாறி உள்ளது.

இந்த மண்ணில் பயிர் செய்தால் விளைச்சல் கிடைப்பதில்லை. செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மற்றும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து தண்ணீர் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் இந்த தண்ணீரை பயன்படுத்தலாமா வேண்டாமா என பதில் கூறவில்லை,

இந்நிலையில் கடந்த 9 மாதங் களாக மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெறுதால், அணையிலிருந்து தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது நீர் தேக்கப் பகுதியில் ரசாயனம் கலந்த கழிவு நீர் தேங்கி கழிவு நீர் குட்டையாக மாறி உள்ளது. மேலும் தூர் வாராததால், அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது.

இதனால், நீர் தேக்கப் பகுதியில் உள்ள வண்டல் மண்ணை தூர்வாரினால், அணையும் ஆழமாகும், ரசாயனம் படிந்த மண்ணையும் வெளியேற்றியதாக இருக்கும். எனவே அணையின் மதகுகளை முழுமையாக சீரமைக்க 5 மாதங்கள் ஆகிவிடும், என்பதால் அதற்குள் நீர் தேக்கப் பகுதியை தூர் வார வேண்டும், என்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x