Published : 31 Oct 2023 06:12 AM
Last Updated : 31 Oct 2023 06:12 AM

ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ஜவளகிரி காப்புக்காடு கக்கமல்லேஸ்வரம் கோயில் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை .

ஓசூர்: ஜவளகிரி வனப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஆண் யானை கொலை செய்யப்பட்டது தொடர்பாக வனத் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் வனக் கோட்டத்தில் காவிரி வடக்கு, தெற்கு என்ற இரு வன உயிரின சரணாலயங்கள் உள்ளன. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 200 க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வருவது வழக்கம்.

கடந்தாண்டு வலசை வந்த 200-க்கும் மேற்பட்ட யானைகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கி உள்ளன. மேலும், தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து யானைகள் வலசை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஜவளகிரி காப்புக்காடு கக்கமல்லேஸ்வரம் கோயில் பகுதியில் வன ஊழியர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 15 வயதுடைய ஆண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதனையடுத்து, தன்னார்வு அமைப்பினர் முன்னிலையில் கால்நடை மருத்துவர் உயிரிழந்த யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தார். அப்போது, துப்பாக்கியால் சுட்டு யானை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மாவட்ட வனப்பாதுகாவலர் கார்த்திகேயனி உத்தரவின்பேரில், வனத்துறையினர் வன உயிரின குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துயானையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x