Published : 30 Oct 2023 09:43 PM
Last Updated : 30 Oct 2023 09:43 PM
ராஜபாளையம்: காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தில் முதல் நகராக ‘கார்பன் சமநிலை ராஜபாளையம் திட்டம்’ தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பிளானில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த சஞ்சீவி மலையில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக உள்ள சஞ்சீவி மலை கொத்தங்குளம் காப்புக்காடு என அழைக்கப்படுகிறது. சஞ்சீவி மலையில் 252 வகையான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்துள்ளது. இந்த மலையில் சஞ்சீவிநாதர் கோயில் மற்றும் முருகன் கோயில் உள்ளது. இந்த மலை உச்சியில் உள்ள ராமர் பாறை என அழைக்கப்படும் தேன்தட்டுப்பாறையின் அடியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் உள்ளது.
வெண்சாந்து கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்களில் பெருங்கற்கால குறியீடுகள் அதிகமாக உள்ளது. மேலும் இப்பாறையில் கோட்டுருவமாக வரையப்பட்ட விஷ்ணு உருவம் உள்ளது. இந்த ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதர்களால் சேதமடைந்து வருகிறது. இதனால் இந்த ஓவியங்களில் இருந்து முழுமையான தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. சஞ்சீவி மலையில் உள்ள பாறை ஓவியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கான திட்டத்தில் தமிழகத்தில் முதல் நகராக ராஜபாளையம் தேர்வு செய்யப்பட்டது. ‘கார்பன் சமநிலை ராஜபாளையம்’ திட்டத்தை அமைச்சர்கள் மெய்யநாதன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தனர். நீண்ட கால திட்டமிடலாக 2041-ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீட்டை சமப்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்கள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் சஞ்சீவி மலை காப்பு காடுகளை பாதுகாத்தல் மற்றும் பசுமை பரப்பை அதிகரித்தல், சுற்றுசூழல் பூங்காக்கள் வடிவமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பசுமை எரிசக்தி முறைகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்றுசூழல் மண்டலத்திற்கான மேலாண்மை திட்டத்தை வனத்துறையுடன் இணைந்து உருவாக்கி செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தனித்துவமான இயற்கை அம்சங்கள் மற்றும் மிகவும் வலுவான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட சஞ்சீவி மலையில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி மையம், பொதுமக்களுக்கு உயிர் பன்முக தன்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
நகரமயமாக்கல் காரணமாக காடுகள் அழிப்பு மற்றும் காட்டுத் தீ போன்றவற்றால் காடுகள் அழிவதை தடுத்து, வனத்துறை, மக்கள் பிரதிநிதிகள், இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய நிர்வாகக் குழுவை உருவாக்கி பசுமை தோட்டம், பூர்விக காடுகளை மீட்டெடுப்பது என இதில் விரிவான 10 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் உள்ளூர் சூழலியல் குழுக்களுடன் இணைந்து மூலிகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த நீண்ட கால ஆய்வும் நடைபெற உள்ளது. மேலும் தொல்லியல் வரலாறு குறித்த சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் இயற்கை ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...