Published : 30 Oct 2023 04:12 AM
Last Updated : 30 Oct 2023 04:12 AM
கோவை: யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோவை வனத்தில் 50 ஏக்கரில் புல்வெளியை உருவாக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
உண்ணிச் செடிகளின் ஆக்கிரமிப்பால், தமிழக வனப்பகுதிக்குள் புல் வகைகளின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால், தாவர உண்ணிகளான யானை, மான் வகைகள், காட்டுமாடு போன்றவற்றுக்கான உணவு குறைந்து விட்டது. இந்த சூழலில், உணவை தேடி அவை காட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, மனித-விலங்கு மோதல், பயிர்சேதம் ஆகியவை ஏற்பட்டு வருகின்றன.
இதை தடுக்கும் வகையில், வனத்துறை சார்பில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின்கீழ், ஜேஐசிஏ (ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை) நிதியுதவியுடன் தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் சுமார் 520 ஹெக்டேர் அளவுக்கு புல்வகைகளை வளர்த்து, புல்வெளியை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை வனப்பகுதியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது: காரமடை வனச் சரகத்தில் 25 ஏக்கர், போளுவாம் பட்டி வனச்சரகத்தில் 25 ஏக்கர் என மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவில் புற்கள் நடப்பட உள்ளன. சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் கோவையில் முதல்முறையாக இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.
வனப்பகுதிக்குள் உண்ணிச்செடிகள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில், இந்த புல்வகைகளை விதைக்கவோ அல்லது நடவோ உள்ளோம். இதற்காக கோவை வனக்கோட்டத்தின் 7 வனச்சரகங்களை சேர்ந்த 40 வனப் பணியாளர்களுக்கு காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட அத்திக்கடவு பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வன பொருட்கள்,
வன உயிரியல் துறை தலைவர் கே.பரணிதரன் தலைமையில், உதவி பேராசிரியர் ரவி, துணை பேராசிரியர் திலக், தனியார் வேளாண் கல்லூரியின் உதவி பேராசிரியர் பாக்கியலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் புற்களை எப்படி தேர்ந்தெடுப்பது, நடுவது என்பது போன்ற களப் பயிற்சிகளை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பேராசிரியர் பரணிதரன் கூறும்போது, “அந்தந்த வனச்சரகங்களில் வளரும் புல்வகைகளை முதலில் கண்டறிந்து, அதில், எந்த புல் வகைகள் வேகமாக பரவக்கூடியது என்று கண்டறிந்துள்ளோம். ஏனெனில், தேர்வு செய்து விதைக்கும் அல்லது நடும் புல்வகை வேகமாக வளர்ந்தால்தான் உண்ணிச்செடி மீண்டும் அந்த இடத்தில் அதிகம் பரவுவதை தடுக்க முடியும்.
விலங்குகள் விரும்பு வகையில் அதிக சத்துள்ள, சுவையுள்ள புல்வகைகள் என கோவையில் 10 வகை புற்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த புற்களை விதைகள் மூலமாகவோ, வேர்கள், தொகுப்பு வேர்கள் மூலமோ வளரச் செய்ய முடியும். மழைக்காலத்துக்கு முன்பாக இவை நடப்பட உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment