Published : 28 Oct 2023 08:55 PM
Last Updated : 28 Oct 2023 08:55 PM
மேட்டூர்: நாட்டின மீன் இனங்களை பாதுகாத்து பெருக்கிட, மேட்டூர் காவிரி ஆற்றில் முதற்கட்டமாக 1 லட்சம் மீன் விரலிகளை அமைச்சர் கே.என்.நேரு விடுவித்தார்.
தமிழக ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி, அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லும் பொருட்டு, ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட, ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ 1.20 கோடி மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் மீன் விரலிகளை இருப்பு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, முதல் கட்டமாக ரூ. 2.70 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் மீன் விரலிகளை மேட்டூர் காவிரி ஆற்றில் விடுவித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: “விவசாயத்தை போல மீன் வளத்தையும் பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. உணவு பொருள் தயாரிக்கும் போது தானியங்களை உற்பத்தி செய்வது, புதிய தானிய வகைகளை கண்டுபிடிப்பது, பழைய இனங்களை அழியாமல் பாதுகாப்பது அரசின் கடமையாகும். தமிழகத்தில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. ஆறுகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு, ரோகு, மிர்கால் ஆகிய மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணையாறு, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோரையாறு, கொள்ளிடம். அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டப்பட்ட முறையில் நாட்டின தாய் மீன்களிலிருந்து மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்யும்போது மீன்குஞ்சுகளின் பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரித்திடும்.
ஆறுகளில் மீன்களை வளர்த்தி, உற்பத்தி செய்யும் போது, மக்களுக்கு உணவாக தான் வருகிறது. தமிழகத்தில் மொத்த உணவு தேவை 2 கோடி டன் வேண்டும். ஆனால், மழை இல்லாததால் போதுமான அளவு நடவு செய்ய முடியவில்லை. குறுவை மட்டுமே தான் இருக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சதாசிவம், கோட்டாச்சியர் தணிக்காசலம், மீன்வளத்துறை மண்டல துணை இயக்குநர் சுப்பரமணியன். உதவி இயக்குநர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT