Published : 27 Oct 2023 08:57 PM
Last Updated : 27 Oct 2023 08:57 PM

30 ஆண்டு தேடலுக்கு அங்கீகாரம்: நண்டுண்ணி உள்ளான் பறவை தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்வது கண்டுபிடிப்பு

மதுரை: ஓமன், ஈரான், சவுதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிகளில் இதுவரை இனப்பெருக்கம் செய்து வந்த நண்டுண்ணி உள்ளான் பறவைகள் முதல் முறையாக தமிழக கடல் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்து வருவதை பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நண்டுண்ணி உள்ளான் என்ற அரிய வகை பறவை இதுவரை ஓமன், ஈரான், சவுதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிகளில் இனபெருக்கம் செய்து, வலசைக் காலங்களில் கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கடலோரங்களுக்கும், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை பகுதிகளுக்கும் வலசை வரும் பறவையாக அறியப்பட்டு வந்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பறவைகள் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்கிறதா என்று நாட்டின் பல்வேறு கடல் பகுதகளில் பறவை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் பறவை ஆய்வாளர்களும், ‘இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை’யை சேர்ந்தவர்களுமான ரவீந்திரன், பைஜூ ஆகியோர் கடந்த இரண்டாண்டுக்கும் மேலாக தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நண்டுண்ணி உள்ளான்கள் வலசைப் வரும் பகுதிகளை ஆய்வு செய்து வந்தனர். இரண்டு ஆண்டு தேடலான இந்த ஆய்வில் நண்டுண்ணி உள்ளான்கள் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்வதை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ரவீந்திரன், பைஜூ இந்த ஆய்வின் மூலம் நண்டுண்ணி உள்ளான்கள் இந்தியாவின் வாழ்விடப் பறவையாக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து பைஜூ, ரவீந்திரன் ஆகியோர் கூறுகையில், ‘‘உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞருமான டாக்டர் சலீம் அலியின் கருத்துக்களின் படி, தென்னிந்திய கடற்கரை பகுதிகளிலும், தென் மேற்கு இலங்கை கடற்கரை பகுதிகளிலும் நண்டுண்ணி உள்ளான்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று கருதப்பட்டது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சில பறவை ஆய்வாளர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த நண்டுண்ணிகளை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர்.

மற்ற உள்ளான் பறவைகளைப் போல இவைகள் தரையில் குழி பறித்தோ, கற்களை அடுக்கி அதன் இடையிலோ முட்டைகளை வைத்து அடைகாப்பது இல்லை. எலிகளை போல மண்ணில் சுரங்கம் அமைத்து இரண்டடிக்கும் குறைவான மணற் பொந்துகளில், பஞ்சுருட்டான், மீன் கொத்திகளைப் போல முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. குஞ்சுகள் ஓரளவு நல்ல வளர்ச்சியை அடைந்த பின்னே பதுங்கு வளைகளை விட்டு வெளியே வருகின்றன. அப்படி வரும் குஞ்சுகளின் தலைப்பகுதி, தோள் பகுதி இறகுகள் சாம்பல் படர்ந்த நிறத்தில் இருக்கும். கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு பிறகு ஆழ்ந்த கருப்பும், பால் வெள்ளை நிறத்தில் இறகுகள் மாறும்.

வேதாரண்யத்தின் சதுப்பு நிலங்களின் ஒரு பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், மீதம் உள்ள பகுதிகளில் மீன்பிடித் தொழில் நடந்து வருகிறது. அவர்கள் இங்குள்ள தீவுப்பகுதிகளை இளைப்பாறவும், வலைகளை காய வைக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும்,, இந்த அறிய வகை பறவைகளை பற்றிய விவரங்கள் அவர்களுக்குத் தெரியாத காரணங்களால் நண்டுண்ணி உள்ளான்களின் வளைகள் அவர்கள் கடந்து செல்லும் போது கால்களில் மிதிபட்டு பாதிப்படையவும் வழி உள்ளது. எனவே அறிய பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை அங்குள்ள மக்களிடம் அரசு வனத்துறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

இதை பற்றி இங்குள்ள பொதுமக்களிடம் பேசும்போது விடுமுறை காலங்களில் பலர் தீவுப் பகுதிகளுக்கு வந்து இரவில் தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும், வலசை வரும் பறவைகள் வேட்டையாடபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே வலசை மற்றும் இனப்பெருக்க காலங்களில் வனத்துறை இப்பகுதிகளில் மீனவர்களை தவிர்த்து மற்றவர்கள் வரத் தடை ஏற்படுத்த வேண்டும். மேலும், இப்பகுதிகள் வனப்பகுதிகளின் அருகில் இருப்பதால் காட்டுப் பன்றிகளும், நரிகளும் பறவைகளின் முட்டைகளை தின்றுவிடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

30 ஆண்டுகளாக பலராலும் தேடப்பட்டு கிடைக்காத ஒரு அரிய தகவல் எங்கள் மூலமாக அறிவியல் உலகத்திற்கு கிடைத்ததை எண்ணி இயற்கைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். இந்த ஆய்வுகளை மேற்கொண்ட காலங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை எங்களுக்குத் தந்துள்ளது. இந்த ஆய்வுக்கு அப்பகுதி நண்பர்களுக்கும், மீனவர்களுக்கும் பெரும் உதவியாக இருந்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அரிய வகை பறவையினங்களை தமிழக அரசு பாதுகாப்பதின் மூலம் உலக அளவில் தமிழ்நாடு பல்லுயிர்களை பாதுகாக்கும் பகுதியாக சிறப்படையும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x