Published : 27 Oct 2023 03:06 PM
Last Updated : 27 Oct 2023 03:06 PM

74% அதிக மழை கிடைத்தும் நிலத்தடி நீர் மட்டம் உயராத அவலம்: கான்கிரீட் பணிகளால் சென்னையில் குறையும் மண் பரப்பு

மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால் கட்டுமானம்.

சென்னை: ஒருவழியாக தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் காலத்தோடு தொடங்கிவிட்டது. விரைவில் தீவிரமடைய உள்ளது. சென்னை மாநகரில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கமாக 44.8 செ.மீ. மழை கிடைக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விட 2 சதவீதம் குறைவாக 43.7 செ.மீ. மழை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 74 சதவீதம் அதிகமாக 78 செ.மீ. மழை கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத மாநகர நிலத்தடி நீர் மட்ட தரவுகளுடன் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்ட தரவுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கிடைத்த மிகை மழைக்கு ஏற்றவாறு நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை குடிநீர் வாரிய தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தாலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன், இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலத்தடி நீர்மட்டத்தை ஒப்பிட்டால், திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. அடையார், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், ராயபுரம், மணலி போன்ற மண்டலங்களில் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவிலேயே நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் திட்டப் பணிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் போன்ற சேவை துறைகளால் ஏற்படுத்தப்படும் சாலை வெட்டுகளை சீரைக்க மேற்கொள்ளப்படும் கான்கிரீட் கட்டுமானங்களாலேயே மாநகரின் மண் பரப்பு குறைந்து, அவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடி நீராக மாற்றும் திறனை இழப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே மாநகரின் உட்புற சாலைகளை 1,273 கி.மீ. நீளத்துக்கு சிமென்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றியுள்ளது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான கான்கிரீட் மழைநீர் வடிகால்களை மாநகராட்சி கட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வெள்ள மேலாண்மைக் குழு பரிந்துரைப்படி 2 ஆயிரத்து 624 கி.மீ. நீளத்துக்கு கான்கிரீட் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிட்டு, கடந்த 3 ஆண்டுகளில் 856 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் கான்கிரீட்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
சாலையில் சோதனை அடிப்படையில் 2019-ல் மழைநீரை நிலத்தடி நீராக
மாற்ற, மழைநீர் வடிகால் கட்டும்போது தரை பகுதியில் அமைக்கப்பட்ட
உறை கிணறு.

2 ஆயிரத்து 624 கி.மீ. நீளம் என்ற இலக்கை எட்டவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சேவை துறைகளால் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 952 சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, சிமென்ட் கான்கிரீட் கலவை கொட்டி நிரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற மாநகராட்சியின் நடவடிக்கைகள் மற்றும் மாநகராட்சி அனுமதிக்கும் நடவடிக்கைகளால் மாநகரின் நிலத்தடி நீர் உறிஞ்சும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இழப்பை ஈடு செய்ய எந்த ஆக்கப்பூர்வமான சிறப்பு திட்டத்தையும் மாநகராட்சி உருவாக்கவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழைநீர் வடிகாலில், மழைநீரை நிலத்தடி நீராக மாற்ற சோதனை அடிப்படையில் உறை கிணறுகள் ஓரிரு இடங்களில் அமைக்கப்பட்டன. பின்னர் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

சென்னை குடிநீர் வாரியத்திடம் ஏராளமான பயன்பாடற்ற கிணறுகள் உள்ளன. அவற்றை முறையாக பராமரித்து, மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றவில்லை. தண்டையார்பேட்டை மண்டலம், 35-வது வார்டு, முத்தமிழ் நகர் பகுதியில் மட்டும் 7 கிணறுகள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு தூர்ந்துபோயுள்ளன.

தண்டையார்பேட்டை மண்டலம், 35-வது வார்டு முத்தமிழ் நகர்
பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான பயன்பாடற்ற
கிணத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,
அதில் மழைநீர் சேகரிக்க சம்பிரதாயத்துக்காக அமைக்கப்பட்டுள்ள
குழாய் இணைப்பு.

அங்கு பெயரளவுக்கு குழாய்களை பதித்து மழைநீர் சேகரிப்பதாக கணக்கு காட்டப்படுகிறது. இந்த ஆண்டு சென்னையில் வழக்கத்தை விட சற்று குறைவாகவே மழை கிடைக்கும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சாந்தஷீலா நாயர்

கிடைக்கும் மழைநீரை சேகரிக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஆகிய பதவிகளை வகித்த, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஓராண்டு நல்ல மழை கிடைத்ததுமே அரசும், மக்களும் மழைநீர் சேகரிப்பை மறந்துவிடுகின்றனர்.

2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தாலும், 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மாநகரம் கடும் வறட்சியை சந்தித்தது. சென்னையில் ஆண்டுதோறும் ஒரே சீரான மழை கிடைப்பதில்லை. அதனால் மழை கிடைக்கும் காலத்தில் அதை சேமிக்க வேண்டும். அதன் அவசியத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த திருவள்ளுவர் 'வான் சிறப்பு' என்ற அதிகாரத்தையே எழுதியுள்ளார். இன்று மாநகராட்சியின் பணிகள் எல்லாம் கான்கிரீட்டாகவே உள்ளன. தனியார் கட்டுமானங்களும் அதிகரித்துவிட்டன. இன்று மாநகரமே கான்கிரீட்டாக உள்ளது. தென் சென்னையின் கடலோர பகுதியில் மழைநீர் வடிகால் திட்டமே வேண்டாம். இயல்பாகவே மழைநீரை கடல் மணல் பரப்பு உறிஞ்சிக்கொள்ளும் என மக்கள் போராடினர்.

சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பாஞ்ச் பூங்கா.

அதை பொருட்படுத்தாது, மழைநீர் வடிகால் கட்டியே தீருவோம் என்று பலவந்தமாக மணல் பரப்பில் கான்கிரீட்டை மாநகராட்சி நிர்வாகம் திணித்துள்ளது. நல்ல மழை கிடைத்தும் நிலத்தடி நீர் உயராததற்கு கான்கிரீட் கட்டுமானங்களால் மண் பரப்பை இழந்ததுதான் காரணம். மாநகராட்சி மேற்கொள்ளும் கான்கிரீட்டால் மழைநீர், நிலத்தடி நீராக மாறாமல் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நான் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, மழைநீர் வடிகால் அமைக்கும்போது, தரை பகுதியில் முழுவதுமாக கான்கிரீட் போடக்கூடாது. மழைநீரை மண் உறிஞ்சுவதற்கு ஆங்காங்கே கான்கிரீட் போடாமல் விட வேண்டும். தரையில் கான்கிரீட் போடாமல் கூட விடலாம் என பரிந்துரை செய்தேன். பின்னர் மாற்றலாகிவிட்டேன். இதை மாநகராட்சி செயல்படுத்த வேண்டும். பக்கவாட்டு பகுதிகளிலும் அதேபோன்று துளைகளை அமைக்க வேண்டும். கிடைக்கும் இடங்களில் எல்லாம் திறந்தவெளி கிணறுகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை எல்லாம் நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்பாக மாற்ற வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளிலேயே இது சிறந்ததாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 54 இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் மழை காலங்களில் கிடைக்கும் நீரை ஸ்பாஞ்ச் உறிஞ்சி வைத்துக்கொண்டு, நிலத்தடி நீராக மாற்றும். 186 ஏரிகள் மற்றும் குளங்கள். 15 கோயில் குளங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களை ஒட்டி, வண்டல் வடிகட்டி குழியுடன் இணைந்த 5 ஆயிரத்து 846 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x