Published : 25 Oct 2023 04:06 AM
Last Updated : 25 Oct 2023 04:06 AM

நீலகிரி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அவசியம்: பொதுமக்களுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தல்

உதகையை அடுத்த கிளன்மார்கன் பகுதியில் அந்நிய தாவரங்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

உதகை: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ் குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், உதகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ் குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மு.அருணா, சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் டாக்டர் டி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய், உள்ளாட்சி, நகராட்சி ஆகிய துறை அலுவலர்களுடன், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை, 01.01.2019 முதல் தடை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள்,

முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத் தாள்கள், தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரப்படுவதை நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணித்து முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வண்ணம் கண்காணிக்க வேண்டும். சோதனைகள் தீவிரப் படுத்தப்பட வேண்டும். குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து, உதகை நகராட்சி தீட்டுக்கல் உரக்கிடங்கை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

நாள்தோறும் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக், துணிகள் ஆகிய குப்பையை உடனுக்குடன் இயந்திரத்தின் மூலமாக துண்டுகளாக்கி, மறு சுழற்சிக்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கிளன்மார்கன் பகுதியில், வனத்துறை சார்பில் சீகை, கற்பூரம் உள்ளிட்ட அந்நிய களைச்செடிகளை அகற்றி, சோலை மரங்கள் மற்றும் புல்வெளிகள் உருவாக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

மாவட்ட வன அலுவலர் கௌதம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ், துணை இயக்குநர் அருண் குமார், மகளிர் திட்ட இயக்குநர் பால கணேஷ், கோட்டாட்சியர்கள் மகராஜ், முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x