Published : 22 Oct 2023 04:12 AM
Last Updated : 22 Oct 2023 04:12 AM

விருதுநகர் | செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய நவீன தொழில்நுட்பம்: இலவச சேவை அளிக்கும் தனியார் அமைப்பு

விருதுநகர் அருகே பேராலியில் செப்டிக் டேங்கை நவீன தொழில்நுட்ப முறையில் சுத்தம் செய்யப்படுவதை பார்வையிட்ட விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன் உள்ளிட்டோர்.

விருதுநகர்: செப்டிக் டேங்க்கை நவீன தொழில்நுட்பம் மூலம் சுத்தம் செய்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் தனியார் அமைப்பு ஒன்று இலவச சேவையை தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கதிரானம்பட்டியில் ‘வாஷ் இன்ஸ்டிடியூட்’ என்ற தனியார் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு சார்பில் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் செப்டிக் டேங்குகளை நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்து, வெளியேற்றப்படும் கழிவுநீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்துவது குறித்து, விருதுநகர் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். இதில், விருதுநகரைச் சுற்றியுள்ள கூரைக்குண்டு, பாவாலி, சிவஞானபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் குறித்து வாஷ் அமைப்பின் நிர்வாகியும், விருதுநகர் திட்டப் பொறுப்பாளருமான அமர்நாத் கூறியதாவது: குடிநீரை சுத்திகரிப்பது போன்ற தொழில் நுட்பம் மூலம் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யப்படுகிறது. 1 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் லிட்டர் வரை சுத்தம் செய்ய முடியும்.

திரவக் கழிவாக வெளியேறும் தண்ணீரை சுத்தமாக்கி, அதை தோட்டத்துக்கும், குடிநீர் அல்லாத மற்ற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும். திடக் கழிவு கரிக்கட்டை போல் மாற்றப்பட்டு உரமாக்கப்படும். விருதுநகர், தூத்துக்குடியில் 500 இடங்களில் செயல் முறை விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

இதற்காக நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மின் இணைப்பு மட்டும் பெற்று, மோட்டாரை இயக்கி இச்சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x