Published : 20 Oct 2023 04:02 AM
Last Updated : 20 Oct 2023 04:02 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் தப்பிச் செல்லும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூரில் தனியார் சொகுசு விடுதியில் இருந்த நாயை கடந்த மாதம் 28-ம் தேதி சிறுத்தை கடித்தது. வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். அதன் பின்னர் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சுழல் கேமராவும் பொருத்தப்பட்டது.
சிறுத்தை வந்து சென்றது அந்த கேமராவில் பதிவானது. ஆனால் கூண்டில் சிக்காமல் அருகே உள்ள குகைக்குள் பதுங்கி உள்ளது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிக்காமல், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இது குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறும் போது, ``தேன்கனிக்கோட்டை அருகே பேவ நத்தம் பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதியிலிருந்து வந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளோம். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன் தென்பட்ட சிறுத்தை, அதற்கு பின்னர் தென்படவில்லை. சிறுத்தை இரவில் மட்டும் நடமாடும் என்பதால், இரவில் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் இடம் பெயர்ந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனாலும் வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மலைக் கிராம மக்கள் வனச்சாலை வழியாக இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment