Published : 19 Oct 2023 03:12 PM
Last Updated : 19 Oct 2023 03:12 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. பருவமழைக்கு முன்பாக சீமைக்கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும். பாலாற்று நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் ஆகிய பகுதிகள் பாலாற்றையொட்டி அமைந்துள்ள இம்மாவட்டத்தில் விவசாயத்தையே நம்பியுள்ளனர். அதிலும், பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளை நம்பியே விவசாய பணிகள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஒரு சில நீர்நிலைகளில் தண்ணீர் காணப்படுகிறது. முக்கிய ஏரிகள், குளங்கள், பாலாறு ஆகியவை வழக்கம்போல் வறண்டு காணப்படுகின்றன.
தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியிலும், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பெருமழை பெய்தால் தமிழக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். வாணியம்பாடி அடுத்த புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிந்தால் வாணியம்பாடி ஒட்டிஉள்ள பாலாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அவ்வாறு வரும் மழை வெள்ளமானது ஒரு சில கி.மீ., தொலைவுக்கு தான் செல்கிறது. அதன்பிறகு அந்த மழைநீர் உறிஞ்சப்பட்டு கானல்நீர் போல காணாமல் போகும் நிலை உள்ளது.
இதற்கு, முக்கிய காரணம் பாலாறு உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீரை அதிகமாக உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக வளர்ந்திருப்பது தான் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவு இருந்தும், அதை அரசு அதிகாரிகள் பின்பற்றாததால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல ஏக்கர் கணக்கில் உள்ள நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களே அதிகமாக வளர்ந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேதுராமன் என்பவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சி, நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதன் மூலம் விவசாய பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர், கந்திலி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் நீர்நிலைகள் மட்டுமின்றி கேட்பாரின்றி கிடக்கும் காலி நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் காடு போல வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த சீமைக்கருவேல மரங்களானது, வேலிகாத்தான், உடைமரம், வேலிமரம், முள்மரம், வேலிக்கருவை என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
கடும் வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட சீமைக்கருவேல மரங்கள் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர் கணக்கில் உள்ளபாலாறு பகுதிகளில் சீமைக்கருவேல மரம் வனப்பகுதியைபோல உள்ளது.
திம்மாம்பேட்டை ஏரி, நாகல் ஏரி, உதயேந்திரம் ஏரி, சங்கராபுரம் ஏரி, வடச்சேரி ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, விண்ணமங்கலம் ஏரி, மின்னூர் ஏரி போன்ற ஏரிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. ஏரியின் மையப்பகுதிக்கு சென்று எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் தான் தென்படுகின்றன.
சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் பின்பற்றப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சீமைக்கருவேல மரங்கள் தற்போது வேகமாக வளர தொடங்கிவிட்டன.
ஆகவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக கவனம் செலுத்தி நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கனமழையால் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் இருந்தால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT