Published : 18 Oct 2023 04:42 PM
Last Updated : 18 Oct 2023 04:42 PM

‘பேருயிர்’ காக்க மின்வாரியம் புது முயற்சி - யானைகளின் ‘காப்பான்’ கருவி @ நீலகிரி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பரப்பை கொண்டுள்ளது. இதில், கூடலூர் வனக்கோட்டத்தில் உணவு மற்றும் தண்ணீருக்காக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஓவேலி யானைகள் வழித்தடம் வழியாக முதுமலைபுலிகள் காப்பகம் சென்று கர்நாடகா மாநிலம் மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதி வரை ஆண்டு முழுவதும் யானைகள் இடம்பெயர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில், ஓவேலி பகுதியில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து வரும் யானைகள் வழித்தடத்தில், அண்மைக்காலமாக யானை - மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்டோர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, நீலகிரி மலை மாவட்டம் என்பதால் மேடு, பள்ளம் கொண்ட வனப்பகுதியைச் சார்ந்தது. இதனால், சில இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இந்த பகுதிகளைக் கடக்கும்வன உயிரினங்கள், குறிப்பாக யானைகள், மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன. கூடலூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. கூடலூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட சேரம்பாடி வனச்சரக பகுதியில், கடந்த 2020 பிப்ரவரி மாதம் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை, நான்கு காட்டு பன்றிகள், இரண்டு கீரிகள், 3 நாக பாம்புகள், ஒரு காக்கை ஆகியவை கருகிய நிலையில் இறந்துகிடந்தன.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. நீதிபதி ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் வழங்கிய உத்தரவில், "மின்சாரம் பாய்ந்து வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க உரிய வழிமுறைகளை மின் வாரியமும், வனத்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

வனப்பகுதிகளில் மின்சார கம்பிகள் அறுந்துவிழும்போதும், மின் கம்பிகள் இருக்கும் பகுதிகளை வன விலங்குகள் கடக்கும்போதும் தானாகவே மின்சாரம் தடைபடும் வகையில் சென்சார் உட்பட பாதுகாப்பு சாதனங்களை பொருத்த வேண்டும். தரைக்கு அடியில் மின்சார கம்பிகளை கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும். மின்சாரம் பாய்ந்து வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு மின் வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு மின் வாரியம் ரூ.75 லட்சம் இழப்பீட்டு தொகையாக வனத்துறைக்கு வழங்க வேண்டும்.

மனித - வன விலங்குகள் மோதல், மின்சாரம் பாய்ந்து வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்கவும், மனித வேட்டையில் இருந்து பாதுகாக்கவும், இந்த தொகையை வனத்துறை பயன்படுத்த வேண்டும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மின் வாரியமும், வனத்துறையும் எடுக்க வேண்டும். மின் வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி காடுகளுக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும். வன விலங்குகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.

தொரப்பள்ளி பகுதியில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டுள்ள கருவி.

இந்நிலையில், வனப்பகுதியில் இருக்கும் உயரழுத்த கம்பிகளை மாற்றி, பாதுகாப்பான ஒரே கேபிள் வழியாக மின்சாரத்தை எடுத்துச் செல்லும் திட்டத்துக்கான ஆய்வை மின்வாரியத்தினர் தொடங்கியுள்ளனர். ‘ஏரியல் பஞ்சுடு கேபிள்’ என்ற முறையில் அனைத்து மின் கம்பிகளையும் ஒரே கேபிளில் இணைத்து, பாதுகாப்பாக சுற்றப்பட்டு மின்கம்பங்கள் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், மழை மற்றும் புயல் காலங்களில் இந்த கேபிள் ஒயர் அறுந்து விழுந்தாலும், வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

முதுமலையில் முதன்முறையாக தொரப்பள்ளி பகுதியில் இருந்து தெப்பக்காடு வனப்பகுதிவரை இந்த ஒற்றை கேபிள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதேபோல, மற்றொரு முயற்சியாக கூடலூர், தொரப்பள்ளி பகுதிகளில் ஒரு மின்மாற்றியை தேர்வு செய்து, அங்கு நவீன கருவியை மின்வாரியத்தினர் பொருத்தியுள்ளனர். இந்த கருவியை யானைகள் உரசியவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்படும். முதுமலை புலிகள் காப்பக வன எல்லையில் தொரப்பள்ளி அமைந்துள்ளதால், அங்கு இந்த கருவியைப் பொருத்தி சோதனை முயற்சியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறும்போது, "வனப் பகுதியை ஒட்டி கூடலூர் அமைந்துள்ளதால், அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து காட்டுயானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துநிகழ்கின்றன. இதைத் தடுக்க மாவட்டத்தில் முதல்முறையாக கூடலூரை அடுத்த தொரப்பள்ளி பகுதியில் ஒரு மின்மாற்றியை தேர்வு செய்து அங்கு நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியில் உள்ள சர்க்யூட் பிரேக்கர் என்ற சிஸ்டம், காட்டு யானைகள் உரசியவுடன் தானாக மின்சாரத்தை துண்டித்துவிடும். அதனால் யானைகளின் உயிரிழப்பு தடுக்கப் படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x