Last Updated : 17 Oct, 2023 05:20 PM

 

Published : 17 Oct 2023 05:20 PM
Last Updated : 17 Oct 2023 05:20 PM

புதுச்சேரியில் திடீரென செம்மண் நிறத்தில் மாறிய கடல் நீர் - பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரி: புதுச்சேரியில் திடீரென செம்மண் நிறத்தில் கடல் நீர் மாறியதால் மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது நீண்ட அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான ஒன்றரை கிலோ மீட்டர் அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது. கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், பழைய கலங்கரை விளக்கம், சுங்கத் துறை அலுவலகம் என அகிழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளன.

இந்த கடற்கரைக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை மணலில் கால் பதித்து கடல் அலையோடு விளையாடுவதை விரும்புவர். மேலும் காலை, மாலை வேலைகளில் கடற்கரை சாலையில் பலர் நடை பயிற்சி மேற்கொள்வதும் உண்டு.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் இன்று வழக்கமான நிறத்தில் இருந்து கடல்நீரானது நிறம் மாறி, செம்மண் நிறத்தில் காட்சியளித்தது. குறிப்பாக, வைத்திக்குப்பம் பகுதியில் கழிவுநீர் கலக்கும் பகுதி முதல் காந்தி சிலை பின்புறம் வரை கடல் நீரானது நிறம் மாறி இருந்தது. கடல் நீரின் இந்த திடீர் நிறம் மாற்றத்தை கண்டு மீனவர்கள் அச்சமடைந்தனர். கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகளும் குழப்பத்தில் உரைந்தனர். சிலர் வியப்புடன் பார்த்துவிட்டு சென்றனர்.

சிலர் கடலில் குளிக்க முடியாததால், கால்களை மட்டும் நனைத்துக் கொண்டு புறப்பட்டனர். கடல் நீரின் நிறம் மாறியது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி அரசு அறிவியல் , தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அதிகாரிகள் கடற்கரைக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து கடல் நீர் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "ஆல்கல் புளூம் எனும் சிகப்பு கடற்பாசிகள் நச்சுக்களை உமிழும். அவ்வாறு கண்ணுக்கு தெரியாத அளவில் அதிகளவில் நச்சுக்களை அவை உமிழ்வதால் கடல் நீரின் நிறம் மாறி இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் ஆய்வின் முடிவு வந்த பிறகே உண்மையான காரணம் என்ன வென்று தெரிய வரும். தொடர்ந்து விசாரித்து வருகின்றோம்” என்றனர். தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ( NCCR ) அதிகாரிகள் கூறுகையில், “கடல் நீரின் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம். அதன் பிறகு கடல் நீரின் மாற்றம் குறித்து தெரியவரும்” என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x