Published : 14 Oct 2023 06:15 AM
Last Updated : 14 Oct 2023 06:15 AM
ஈரோடு: பவானிசாகர் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் ‘கட்டையன்’ என பெயரிடப்பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சர கத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து இரு நாட்களுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை யானை, அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் புகுந்து வாழைமரங்களைச் சேதப் படுத்தியது. விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பவானிசாகர் அணைப்பகுதியை ஒட்டிய சித்தன்குட்டை வனப்பகுதிக்குள் யானை சென்றது. மீண்டும் விளை நிலங்களுக்குள் நுழைந்து யானை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
உள்ளூர் மக்களால் ‘கட்டையன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த யானை, அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகத் தெரிவித்த கிராம மக்கள், அதைப் பிடித்து, வேறு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ‘கட்டையன்’ யானையைப் பிடிக்க ஆனை மலையில் இருந்து முத்து மற்றும் கபில்தேவ் என பெயரிடப்பட்ட இரு கும்கி யானைகள் விளாமுண்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. விளாமுண்டி வனச்சரக அலுவலகத்தில் இந்த இரு கும்கி யானைகளும் உள்ளன.
சித்தன்குட்டை பகுதியில் இருந்து விளாமுண்டி வனப் பகுதிக்கு ‘கட்டையன்’ யானை இடம் பெயர்ந்து விட்டதா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானையின் இருப்பிடம் கண்டறியப்பட்டதும், அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில், மருத்துவர்கள் சதாசிவம், விஜயராகவன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று மருத்து வர்கள் தயார் நிலையில் உள்ளனர். யானையின் இருப்பிடத்தை அறியும் முயற்சியில் வனத்துறை யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT