Last Updated : 12 Oct, 2023 05:33 PM

 

Published : 12 Oct 2023 05:33 PM
Last Updated : 12 Oct 2023 05:33 PM

‘ஓசூர் வனப்பகுதிகளில் மின் விபத்தில் விலங்குகள் உயிரிழப்பை தடுக்க பிளாஸ்டிக் மின் கேபிள் அமைக்க வேண்டும்!’

அஞ்செட்டியிலிருந்து உரிகம் செல்லும் வனப்பகுதியில் மின் கம்பங்களுக்கு இடையில் தாழ்வாகச் செல்லும் மின் வயர்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் மின் விபத்தில் சிக்குவதைத் தடுக்க பிளாஸ்டிக் மின் கேபிள் அமைக்க வேண்டும் என இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, உரிகம், ஜவளகிரி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 1,501 சகிமீ ஆகும். இதில், காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் 504.33 சகிமீ மற்றும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் 686.40 சகிமீ பரப்பளவில் உள்ளன.

இங்கு 468 வகையான தாவர இனங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவையினங்கள், 172 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள் மற்றும் மயில்கள் உள்ளன. மேலும், இங்கு அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகளும் உள்ளன.

அதிக வன விலங்குகள், பறவைகள் வாழும் வனக்கோட்டமாக ஓசூர் உள்ளது. இங்கு நிரந்தரமாக உள்ள 150 யானைகள் மற்றும் ஆண்டுதோறும் கர்நாடக மாநிலம் வனப்பகுதியிலிருந்து வலசை வரும் யானைகள் சுமார் 200 ஆகியவை தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில வனப்பகுதியில் சுற்றி வருகின்றன.

யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தங்கள் பாதையில் உள்ள விளை நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து பயிர் மற்றும் மனித உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையில், வனம் மற்றும் வனத்தையொட்டிய கிராமப் பகுதியில் பல இடங்களில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தாழ்வான மின் வயரில் உரசி உயிரிழப்பும் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதைத் தடுக்க மின்துறை மற்றும் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் ஆகிய வனப்பகுதி மற்றும் கிராமங்களில் இரும்பு மின் கம்பங்கள் மற்றும் பழைய வயர்களை அகற்றி பிளாஸ்டிக் மின் கேபிள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இயற்கை மற்றும் வன ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் வனக்கோட்டத்தையொட்டிய மலைக் கிராமங்களின் மின் தேவைக்காக வனப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெறுகிறது. அந்த வயர்களும், கம்பங்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன.

தற்போது, வயர்கள் வனப்பகுதியில் தாழ்வாக உள்ளது. மேலும், மழைக் காலங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழும்போது மின் வயர்களும் அறுந்து விழும் நிலை உள்ளது.

எனவே, வனப்பகுதி வழியாகச் செல்லும் பழைய மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்களை அகற்றி பிளாஸ்டிக் வயர் மின் கேபிள் அமைக்க வேண்டும்.

மேலும், சில மாவட்டங்களில் வனவிலங்குகள் மின் விபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க வனவிலங்குகளின் வழித் தடங்களில் உள்ள மின்மாற்றிகளில் தானாக மின்சாரம் துண்டிக்கும் எம்சிசிபி கருவி பொருத்தியிருப்பதுபோல இங்கும் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x