Published : 10 Oct 2023 05:56 PM
Last Updated : 10 Oct 2023 05:56 PM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருப்பதால், இவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலும், பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், உதகையில் 1967-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ஹெச்பிஎஃப் தொழிற்சாலை திறக்கப்பட்டது. இந்திரா காந்தியால் தேசத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் பொதுத்துறை நிறுவனம் ஹெச்பிஎஃப் ஆகும்.
இந்த தொழிற்சாலையின் மூலமாக போட்டோ ரோல் பிலிம், எக்ஸ்-ரே, பிலிம், கருப்பு- வெள்ளை பிலிம், போட்டோக்களை பிரின்ட் போட பயன்படும் ‘ப்ரோமைட் பேப்பர்’ உட்பட பிலிம் தொழில்நுட்பத்தில் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன்மூலமாக 5000 தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனர்.
மேலும், தொழிற்சாலையை விரிவுபடுத்த எண்ணிய மத்திய அரசு, ரூ.500 கோடி மதிப்பில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை, உதகை இந்து நகர் பகுதியில் அமைத்து, மேலும் பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்தது.
இந்நிலையில், 1991-ம் ஆண்டுக்கு பின் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கையால் பல அந்நிய முதலீட்டாளர்களும், தனியார் பிலிம் நிறுவனங்களும் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தன. இதனால், இத்தொழிற்சாலை பெரும் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இங்கு பணிபுரிந்து வந்த 5,400 தொழிலாளர்களை, பல்வேறு திட்டத்தின் கீழ் படிப்படியாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஹெச்பிஎஃப் தொழிற் சாலையில் பணிபுரிந்த 634 தொழிலாளர்களுக்கு, 2007-ம் ஆண்டு சம்பள விகிதத்தில் விருப்ப ஓய்வு திட்டம் அமல்படுத்துவதற்காக ரூ.181.54 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு ஒதுக்கியது. அதன்பேரில், சுமார் 403 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர்.
ஆனால், இளநிலை தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தால் பணப் பலன்கள் கிடைக்காது என்பதால், அவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அரசு உறுதியாக இருந்த நிலையில், அனைத்து தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால், தங்களுக்கு சேர வேண்டிய பணப் பலன்களை முறையாக வழங்கக் கோரி, தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலை திவால் சட்டப்படி சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. செயலிழந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்ட சுமார் 300 ஏக்கர் முதன்மையான வன நிலம், வரும் 12-ம் தேதி ரூ.88 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது என்ற செய்தி, நீலகிரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனத்தால் பயன்பெற்ற ஆயிரக்கணக்கான குடும்பத்தினர், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் வங்கியாளர் டி.வேணுகோபால் கூறும்போது, "உதகை ஹெச்பிஎஃப் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்ட சுமார் 300 ஏக்கர் நிலம் விற்பனைக்கான அறிவிப்பு, செப்டம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் விற்பனை, தமிழ்நாட்டில் பரவலாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.
விற்பனையின் கீழ் உள்ள சொத்து ‘சர்ச்சைக்குரிய சொத்தாக' தகுதி பெற்றுள்ளது. மேலும் தமிழக அரசிடம் வன நிலம் என்று விவரிக்கப்படவில்லை. குத்தகையின் நோக்கம் நிறைவேறாதபோது, நிலத்தை மீள் கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இருந்தது. உண்மையில், மாவட்டத்தில் முதல் மருத்துவக் கல்லூரி கட்ட நிலத்தின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.
இந்து நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்ட் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் விலை என்று வைத்துக்கொண்டால், 291 ஏக்கர் நிலம் குறைந்தபட்சம் ரூ.1,500 கோடி மதிப்புடையது. இதில், பல கோடி மதிப்பிலான நிலத்திலுள்ள கட்டிடங்கள் மற்றும் பிற உபகரணங்களும் சேர்க்கப்படவில்லை. அத்தகைய சொத்துக்கான குறைந்தபட்ச ஏல விலை பொதுவாக குறைந்தபட்சம் 50 சதவீதம் அல்லது சுமார் ரூ.800 கோடி. ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்தபட்ச விலையாக ரூ.88 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி பொதுத்துறை நிறுவனங்களின் புனரமைப்பு வாரியம் (பிஆர்பிஎஸ்இ) வங்கிகள் மற்றும் எஃப்ஐஐகளின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக, தமிழகத்திலுள்ள ஹெச்பிஎஃப் நிலங்களை விற்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. மேலும், சில நிலங்களை மாநில அரசிடம் திரும்ப ஒப்படைக்கவும் பரிந்துரைத்தது.
ஆயுதத் தொழிற்சாலை வாரியம் போன்ற வேறு எந்த அரசு நிறுவனமும், நிறுவனத்தின் நிலத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதை அனுமதிக்க வேண்டும் என்றும் வாரியம் பரிந்துரைத்துள்ளது. ஹோட்டல் அமைப்பது போன்ற வேறு எந்த பயன்பாட்டுக்கும் கிடைக்கக்கூடிய நிலத்தை அரசு பயன்படுத்த விரும்பினால், அதுவும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார். இந்நிலையில், ஹெச்பிஎஃப் நிலம் விற்பனைக்கு என்ற அறிவிப்பு இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "ஹெச்பிஎஃப் நிறுவனத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் முடிந்ததும், வனத்துறைக்கு திரும்பிவிடும். அந்த நிலத்தை உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஐடி பார்க் அல்லது பிலிம் சிட்டி அமைக்க தமிழக அரசு அவ்வப்போது முன்மொழிந்து வருகிறது. இந்நிலையில், தொழிற்சாலை திவாலாகிவிட்ட பின்னர், நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நிலத்தை எப்படி விற்பனை செய்ய முடியும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT