Published : 09 Oct 2023 03:00 PM
Last Updated : 09 Oct 2023 03:00 PM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி ஊராட்சிக்கு உட்பட்ட உமராபாத் பகுதியில் இருந்து, மாச்சம்பட்டு கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையை சீரமைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை வழியாக கைலாசகிரி ஊராட்சியில் உள்ள குப்பு ராசுபள்ளி, இருளர் பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கைலாசகிரி ஊராட்சியில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பையை டன் கணக்கில் இந்த சாலையின் இருபுறங்களிலும் கொட்டப்படுவதால் இந்த சாலை சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மழைக்காலங்களில் துர்நாற்றம்: இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘உமராபாத்- மாச்சம்பட்டு பிரதான சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். எங்கிருந்தோ கொண்டு வரப்படும் குப்பை கழிவுகள், உணவு கழிவுகள், கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகள் இந்த சாலையோரம் கொட்டப்படுகிறது.+
ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு குப்பை கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. கிராம மக்கள் வசதிக்காக பல லட்சம் செலவழித்து போடப்பட்ட தார்ச்சாலை தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து, குண்டும் குழியுமாகவே மாறிவிட்டது. சாலையின் ஒரு சில இடங்கள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய் வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலை முழுவதும் குப்பை கழிவுகள் சிதறிக்கிடப்பதால் அதன் மூலம் வெளியேறும் துர்நாற்றத்தை சுவாசித்தப்படி செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குப்பை கழிவுகளை அகற்றுவதோடு மட்டும் அல்லாமல் மீண்டும் குப்பை கழிவுகள் கொட்டப்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்: இதுதொடர்பாக கைலாசகிரி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘சாலை சேதமடைந்த இடத்தில் பேட்ச் ஒர்க் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைக்கழிவுகள் அவ்வப்போது அகற்றி தான் வருகிறோம். பொதுமக்களிடம் பலமுறை எடுத்துக்கூறியும் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து அங்கு கொட்டப் படுகிறது. இனி குப்பை கழிவுகள் கொட்டுவது யார்? என கண்காணித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT