Last Updated : 06 Oct, 2023 01:39 PM

 

Published : 06 Oct 2023 01:39 PM
Last Updated : 06 Oct 2023 01:39 PM

மக்கிப்போனதா மஞ்சப்பை விழிப்புணர்வு: சேலத்தில் நெகிழிப்பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

சேலம் கிச்சிப்பாளையம் சாலை கருவாட்டு பாலம் அருகே செல்லும் வெள்ளக்குட்டை ஓடையில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள். | படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை புழக்கத்தை மக்களிடம் பரப்பிட மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் காலப்போக்கில் மக்கிப்போனதால், நெகிழிப்பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை காத்திடவும், மேம்படுத்தவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்திட வேண்டி, மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 28 சதவீதம் காடுகளை 33 சதவீதமாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இதுபோன்ற திட்டங்களை அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் பிள்ளையார் சுழி போடுவதோடு நிறுத்திக் கொண்டு, அத்திட்டங்களை முழுமையாக்கும் பின்னூட்ட காரணிகளை கைவிடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

அதுபோல, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும், நெகிழி பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்தார். நெகிழிப்பை பயன்பாடு நாட்டுக்கும், வீட்டுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்ற விழிப்புணர்வுடன் அதிகாரிகள் கடைகள், நிறுவனங்களில் தொடர் ஆய்வு செய்து பல டன் எடையுள்ள நெகிழிப்பைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இந்த திட்டத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் சேலம் மாநகரம் முழுவதும் நெகிழிப்பையின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உணவு, மளிகை, வீட்டு பயன்பாடு பொருட்களை மறைமுகமாக நெகிழிகளில் அடைத்து கொடுத்து வந்த வியாபாரிகள் அதிகாரிகளின் பூஜ்ய நடவடிக்கையால் பட்டவர்த்தனமாக நெகிழிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடைகளிலும், நிறுவனங்களிலும் மக்களிடம் வழங்கும் நெகிழிப்பைகள் கழிவுநீர் கால்வாய்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

மேலும், மண் பரப்பிலும் பரவிக் கிடக்கின்றன. மண்ணை மலடாக்கும் நெகிழிப்பைகளால் விவசாயத்துக்கு கடும் எமனாகி, உணவு பஞ்சத்துக்கு அடித்தளமிட்டு வருகிறது. மண் மாசுபாடு, நீர் வளம், விவசாய பரப்புகளை அழிக்க வல்ல நெகிழிப்பை பயன்பாட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது வருத்தமளிக்கிறது.

இன்று நம் மண்ணை பேணாவிடில், நாளை செடி, கொடிகளை வளரவிடாமல் நெகிழிப்பைகள் பசுஞ்சோலைகளை அழித்து பாலைவனத்தை எதிர்கால சந்ததிக்கு பரிசளிக்கும் என்பதை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் குடிமக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திட வேண்டிய தருணம் இது.

எனவே, அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை காக்க உறுதிபூண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x