Published : 06 Oct 2023 04:08 PM
Last Updated : 06 Oct 2023 04:08 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்த போதிலும், போதிய தடுப்பணைகள் இல்லாததால் பல லட்சம் கனஅடி மழைநீர் வீணாகியது. தென்மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமுள்ள பசுமை மாவட்டம் என பெயர்பெற்றது கன்னியாகுமரி. ஆனாலும் இங்கு ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக முக்கடல் அணையை மட்டுமே நம்பியுள்ள நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில், சில சமயங்களில் மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் பரிதாப நிலை உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் தேவைக்கு உரிய குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது. இதுபோலவே, கடற்கரை கிராமங்கள், மார்த்தாண்டம், கிள்ளியூர், கருங்கல், தக்கலை, ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆண்டுதோறும் கேரளாவுக்கு இணையாக தென்மேற்கு பருவமழையும், தமிழகத்தின் பிற பகுதிகளைப் போல் வடகிழக்கு பருவமழையும் இங்கு பெய்கிறது. நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதம் மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே நேரம் கடந்த செப்டம்பர் மாதம் விட்டுவிட்டு பெய்த மழை விவசாயத்துக்கு கைகொடுத்தது. இம்மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வழக்கத்தைவிட அதிகமாக கனமழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மழைக்காலத்தில் பழையாறு, முல்லையாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறு ஆகியவற்றின் வழியாக பல லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. இதனை சேமிக்க வழியில்லை. மாவட்டம் முழுவதும் அனைத்து ஆறு மற்றும் பெரிய கால்வாய்களில் 150-க்கு உள்ளாகவே தடுப்பணைகள் உள்ளன.
உதாரணமாக பழையாறு மணக்குடி கடலில் கலக்கும் இடம் வரை சபரி அணை, சோழன்திட்டை அணை போன்ற ஒன்றிரண்டு தடுப்பணைகள் மட்டுமே உள்ளன. முறையாக திட்டமிட்டு சாத்தியமுள்ள இடங்களில் போதிய தடுப்பணைகள் கட்டினால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாது.
இதுபோலவே, குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தடுப்பணைகள் அதிகமாக கட்டினால் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் இதுபோன்ற நீர் மேலாண்மைப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் மழைக்காலத்தில் பல லட்சம் கனஅடி மழைநீர் சேமிக்க முடியாமல் கடலில் வீணாகிறது.
நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் கனமழை நேரத்தில் நீர்மட்டம் வேகமாக உயர்வதும், இரு மாதங்கள் மழை பெய்யாவிட்டால் அணையின் நீர்மட்டம் மைனஸ் அளவுக்கு செல்வதும் வாடிக்கை.
இதுகுறித்து, வேளாண் ஆர்வலர் சங்கரபாண்டி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பழையாறு, முல்லையாறு, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு போன்றவற்றில் தடுப்பணைகளை கூடுதலாக கட்டி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வகை செய்யவேண்டும் என, விவசாயிகள் கூட்டத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம். அதிகாரிகளிடமும் வலியுறுத்துகிறோம்.
ஆனால், குமரி மாவட்டம் நிலத்தடிநீர் அதிகமுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும், தடுப்பணைகள் தேவையில்லை என்றும், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தால் கோடையிலும் குறைவான ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியானால் கோடைகாலத்தில் விவசாயிகளையும், குடிநீர் தேவைக்காக பொதுமக்களையும் தண்ணீருக்காக அலைய விடுவது ஏன்?
தடுப்பணைகள் இருந்தால் தட்டுப்பாடான நேரத்தில் அந்தத் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். அத்துடன் நிலத்தடிநீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு அத்தியாவசிய குடிநீர்த் தேவையும் நிவர்த்தியாகும். நீர் மேலாண்மையை நடைமுறைப்படுத்தும் வகையில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT