Published : 25 Sep 2023 06:23 PM
Last Updated : 25 Sep 2023 06:23 PM

மரக்கன்று, விதை பென்சில் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் மதுரை இளைஞர்!

அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு துணிப்பைகள், விதைப் பென்சில்களை வழங்கிய இயற்கை ஆர்வலர் க.அழகுராஜா.

மதுரை: சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக துணிப் பைகள், விதைப் பென்சில்கள், மரக் கன்றுகளை வழங்கி வருகிறார் இயற்கை ஆர்வலர் க.அழகுராஜா (33).

மதுரை விளாங்குடி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த இவர், ஐடிஐ படித்துள்ளார். பள்ளிகள்தோறும் சென்று குழந்தைகளுக்கான அரசின் விழிப்புணர்வு திரைப்படங்களை ஒளிபரப்பும் தனியார் நிறுவனத்தில் புரொஜக்டர் ஆபரேட்டராக பணிபுரிகிறார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இதற்காக ‘மதுரை மண்ணின் மைந்தர்கள்’ என்ற பெயரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக துணிப் பைகள், விதைப் பென்சில்கள், மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.

பாலித்தீன் பயன்பாட்டை கைவிட வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அழகுராஜாவின் முயற்சிக்கு, அவரது மனைவி ரதி, மகன் பிரபாகரன் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.

இதுகுறித்து க.அழகுராஜா கூறியதாவது: ஆசிரியரான எனது தந்தை கதர்க்கொடி, எனக்கு சிறு வயதிலிருந்தே சமூக அக்கறையுடன் வாழ வேண்டும் என்பதை கற்றுத் தந்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்படும் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகளை படித்தபோது, களத்தில் இறங்கி நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது.

2019-ம் ஆண்டிலிருந்து எனது மனைவியுடன் சேர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மரக் கன்றுகளை வழங்க தொடங்கினேன். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தோம். இதையடுத்து மாணவர்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வளர்க்கத் தொடங்கினர். தற்போது துணிப்பைகள், விதைப் பென்சில்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.

நாட்டுக் காய்கறி விதைகளுடன் கூடிய பென்சில், துணிப்பைகளை கோவையிலிருந்து வாங்கி மாணவர்களுக்கு கொடுக்கிறோம். எனது சம்பளத்தில் மாதம் ரூ.3,500-ஐ இதற்காக செலவிடுகிறேன். பறவைகளுக்கு இரை கிடைக்கும் நோக்கத் தில் பெரும்பாலும் பழ மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன்.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 450 மரக்கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளன. மதுரையிலுள்ள நீர்நிலைகள் மாசடைந் துள்ளதை புகைப்படங்கள் எடுத்து, அதை பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x