Published : 18 Sep 2023 04:02 AM
Last Updated : 18 Sep 2023 04:02 AM
கூடலூர்: கூடலூர் அருகே யானைகள் வருவதை முன் கூட்டியே அறிவிக்கும் புதிய வகை கேமரா பொருத்திய எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிதர்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட இடங்கள் அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு குடியிருக்கும் தேயிலை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானைகளிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. இதனால் மனித - விலங்கு மோதலும் தொடர்கிறது. கூட்டமாக ஊர்க்குள் வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து முகாமிடும் பணியும் தொடர்கிறது.
இந்நிலையில், கேமரா பொருத்திய எச்சரிக்கை மணி ஒலிக்கும் கோபுரங்கள் அமைக்கும் பணி, பிதர்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட முக்கட்டி, நெலாக்கோட்டை, கோட்டாடு உள்ளிட்ட யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் நடந்து வருகிறது. கூடலூர் தாலுகாவில் யானைகள் நடமாட்டம் உள்ள 18 இடங்களில் இந்த உடனடி தகவல் தரும் கோபுரங்கள் அமைக்கப்படுவதாக வனத்துறையினர் கூறினர்.யானைகள் வருவது கேமராவில் பதிவானவுடன், உடனடியாக வனத்துறைக்கு குறுஞ்செய்தி வந்துவிடும்.
இது குறித்து பிதர்காடு வனச்சரகர் ரவி கூறும்போது, "இந்த எச்சரிக்கை கருவியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் சிம் கார்டும் உள்ளது. யானைகள் வருவது இரவு நேர கேமராவில் பதிவானவுடன், அதன் படத்துடன் ஒரு குறுஞ்செய்தி வனத்துறை அதிகாரிகளுக்கு வந்துவிடும். வனத்துறையினர் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று யானைகளை விரட்ட முடியும்.
அதேபோல, சைரன் சத்தமும் கேட்பதால், மக்களும் யானைகள் இருக்கும் இடத்துக்கு வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும். இதன் மூலமாக, உயிரிழப்புகளை தடுக்க முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment