Published : 15 Sep 2023 04:02 AM
Last Updated : 15 Sep 2023 04:02 AM

உதகை அருகே புலிகள் இறந்த விவகாரம் - வன அலுவலர் அலுவலகம் முற்றுகை

உதகையிலுள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட எமரால்டு மக்கள்

உதகை: உதகை அருகே இரண்டு புலிகள் இறந்த விவகாரத்தில் விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவத்தில், உதகை வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை யிட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப் பகுதியில், கடந்த 9-ம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதையடுத்து, நீலகிரி உதவி வனப் பாதுகாவலர் ( தலைமையிடம் ) தேவராஜ் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இதில் எமரால்டு பகுதியை சேர்ந்த சேகர் (58) என்பவருக்கு சொந்தமான பசு மாடு காணாமல் போனது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், பசு மாட்டை புலி அடித்துக் கொன்றதால், ஆத்திரத்தில் பசு மாட்டின் உடலில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்ததும், வேட்டைக்கு பின்னர் மீண்டும் பசு மாட்டின் இறைச்சியை சாப்பிட வந்த போது விஷம் கலந்த இறைச்சியை தின்று புலிகள் இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சேகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முறையான விசாரணை நடத்தவில்லை என்று கூறி சேகரின் மகன்கள் மற்றும் கிராம மக்கள், உதகையிலுள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். உதகை டிஎஸ்பி பி.யசோதா, வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, "எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதியில் எவ்வளவு பேரிடம் மாடு உள்ளது? சமீபத்தில் யாரேனும் மாடு தொலைந்ததாக புகார் அளித்தார்களா? என்பது குறித்து விசாரித்தோம். அதில், சேகரின் மாடு தொலைந்ததாக தகவல் கிடைத்தது. அதனடிப் படையில் விசாரித்த போது, எனது மாட்டின் கழுத்தில் கயிறு, சங்கு இருக்கும்.

இறந்து கிடந்தது எனது மாடுதான் என்று அவர் ஒப்புக் கொண்டார். முறையாக விசாரணை நடத்தி அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே கைது செய்தோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x