Last Updated : 13 Sep, 2023 04:02 PM

 

Published : 13 Sep 2023 04:02 PM
Last Updated : 13 Sep 2023 04:02 PM

புதுச்சேரி பொது இடங்களில் மரங்களை பராமரிப்பதே இல்லை! - கண்டுகொள்ளாத பொதுப்பணி, வனத் துறை

புதுவை காந்தி வீதியில் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பொதுப்பணித் துறையினர்.

புதுச்சேரி: அழகான நகரமான புதுச்சேரியில் சாலையோரம் மரங்கள் அதிகளவில் இருக்கும். தானே புயலுக்குப் பிறகு மரங்களின் எண்ணிக்கை சரிந்தன. அதன்பின் பெயரளவுக்கு பலரும் மரக்கன்றுகளை நடுவதும், அதை பராமரிக்காமல் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இதற்கிடையே 75-வது சுதந்திரத் தினத்தையொட்டி 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவைதுணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். ஆனால் பல இடங்களில் நட்ட மரக்கன்றுகள் வளரவே இல்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் நடப்பட்டதாக தெரிவித்தாலும், பொதுப்பணித்துறை, வனத்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகியோரிடம் எத்தனை மரங்கள் நடப்பட்டன, எந்த வகையான மரங்கள் நடப்பட்டன என்கிற தகவலே இல்லை.

இந்தச் சூழலில் நகரின் பல பகுதிகளில் வளர்ந்த மரங்களின் கிளைகளை மும்முரமாக வெட்டுவதை பார்த்தபோது அவர்களிடம் கேட்டதற்கு, " உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் நடப்பட்ட மரக்கன்றுகள் 2 ஆண்டுகள் கழித்து மரங்களாக வளர்ந்து விடுகிறது. உயர்மின் அழுத்த கம்பிகள் மீது பட்டு மின் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் அந்த மரக்கிளைகளை வெட்ட ஒரு நாள் முழுவதும் அந்த பகுதியில் மின்தடை செய்து, மின்துறை ஊழியர்களைக் கொண்டு இந்த மரங்களை வெட்டுகிறோம். இதனால் மின்துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அப்பகுதி மக்களுக்கு மின்சார தடையால் சிரமமும் ஏற்படுகிறது. குறிப்பாக செஞ்சி சாலை, திருவள்ளுவர் சாலை போன்ற பல முக்கிய சாலைகளில் இந்த நிலை தொடர் கதையாக உள்ளது. " என்கின்றனர்.

சரியான பராமரிப்பு இல்லாத நிலையில் புதுச்சேரி
காமராஜர் சாலையில் காற்றில் விழுந்த மரம்.

இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் சாலைகள் தெற்கு பிரிவுக்கு சொந்தமான இடங்களில் 3,794 மரங்களும், கட்டிடம் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவில் 2,911 மரங்களும், தேசிய நெடுஞ்சாலை பிரிவில் 1,612 மரங்களும், நீர்ப்பாசன கோட்ட இடங்களில் 14,169 மரங்களும் என பொதுப்பணித்துறைக்கு 22,466 மரங்கள் உள்ளன.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இத்தகவலை பெற்றோம். இவற்றில் பலன் தரும் மரங்களான புளிய மரம், தென்னை, பனை மரங்களும் உள்ளன.

ஆனால், தமிழகம் போல் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையினர் இந்த மரங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கருப்பு கலரில் எண்களை எழுதி வரிசைப்படுத்தி பதிவேடுகள் மூலம் முறையே பராமரிக்காமல் உள்ளனர். பலன் தரும் மரங்களை இதுநாள் வரையில் கணக்கெடுக்காமலும் உள்ளனர். இதைச் செய்தால் மரங்களை காக்க முடியும், அதை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

வனமே இல்லாத புதுச்சேரியில் செயல்படும் வனத்துறையினரோ சாலையோர மரங்களைக் கூட பராமரிக்காமல் உள்ளனர். அவர்களிடம் எவ்விவரமும் பெற முடியாது. மரங்களை இரண்டு துறையினரும் பராமரிப்பதே இல்லை.

முதலில் மரங்கள், எந்தெந்த பகுதிகளில் எத்தனை மரங்கள், எந்த வகையான மரங்கள் நடப்பட உள்ளது என கணக்கிட்டு, நடப்பட்ட மரக்கன்றுகளை முறையே பதிவேடுகள் மூலம் பராமரிக்க வேண்டும்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங் களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கருப்பு கலரில் எண்கள் எழுதி பராமரிக்கவும், பலன் தரும் மரங்களை பொதுப்பணித்துறையினரே குத்தகைக்கு விடவும், சாலை ஓர மரங்களை வனத்துறை மூலம் பராமரிக்கச் செய்யவும் நடவடிக்கை எடுத்தால்தான் மரங்களை காக்க முடியும்" என்கின்றனர்.

"புதுச்சேரியில் நகர பகுதிகளில் பல இடங்களில் வைக்கப்படும் மரங்கள் பல வெட்டப்பட்டு இருக்கும். விசாரித்தால், கடைகளுக்கு தொந்தரவாக இருப்பதால் பலரும் அதை அகற்றி விடுகின்றனர். இதற்கு துறை அதிகாரிகளும் உடந்தைதான். அண்மையில் இதுபற்றி காவல்துறையில் புகார் தந்தும் பயனில்லாமல் போனது.

பல இடங்களில் நகரில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கவும், மரங்களில் மின்விளக்குகளைச் சுற்றி அலங்காரப்படுத்திக் கொள்ளவும், கேபிள் ஒயர்களை சுற்றி விடவும்தான் பயன் படுத்துகின்றனர். துறை சார் அதிகாரிகளும் அதை கண்டுகொள் வதில்லை” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x