Published : 09 Sep 2023 04:53 PM
Last Updated : 09 Sep 2023 04:53 PM

நன்னிலம் அருகே சாலை ஓரத்தில் கொட்டப்படும் பயன்படுத்திய ஊசிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நன்னிலம் அருகே தூத்துக்குடியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள பயன்படுத்தப்பட்ட ஊசிகள்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சாலை ஓரத்தில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் (சிரஞ்சுகள்) மற்றும் மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கையுறைகள், பஞ்சுகள் போன்றவற்றை தரம் பிரித்து, அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் பல மருத்துவமனைகள் இவ்விதிகளை பின்பற்றாமல் பயன்படுத்திய ஊசி, மருந்து பாட்டில்களை இரவுநேரங்களில் சாலையோரங்களில் கொட்டிவிடுகின்றன.

நன்னிலம் அருகே தூத்துக்குடி என்ற இடத்தில் சாலை ஓரத்தில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துகள் நேற்று கொட்டப்பட்டு கிடந்தன. இவற்றால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும்நிலை உருவாகி உள்ளது. மேலும், இவற்றால் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் குவியலாக கொட்டப்பட்டு கிடந்தன. இதுதொடர் பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் அதே இடத்தில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளன.

எனவே, விதிகளை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x