Last Updated : 06 Sep, 2023 05:35 PM

 

Published : 06 Sep 2023 05:35 PM
Last Updated : 06 Sep 2023 05:35 PM

கிருஷ்ணகிரி அணை கால்வாயில் ‘சங்கமிக்கும்’ பிளாஸ்டிக் கழிவால் மாசடையும் நீர்!

கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி ஏரியின் உபரிநீர் வெளியேறும் பகுதியில் பல இடங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவு.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை இடதுபுறக் கால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், நீர் மாசடைவதோடு, நீர் கடத்தும் திறன் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். கிருஷ்ணகிரி அணை இடதுபுறக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் அவதானப்பட்டி ஏரி, கோவிலூர் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகளை 18 கிமீ தூரம் கடந்து பாளேகுளி ஏரிக்குச் செல்கிறது.

இக்கால்வாய் செல்லும் பாதையில் 28 இடங்களில் விளை நிலங்களுக்குத் தண்ணீர் செல்லும் சிறிய மதகுகள் உள்ளன. கிருஷ்ணகிரி அணையில் இடதுபுறக் கால்வாய் செல்லும் பெரியமுத்தூர், துவாரகாபுரி, அவதானப்பட்டி உள்ளிட்ட பகுதி கால்வாயில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பை கழிவு கொட்டப்படுவதால், நீர் வழித்தடம் மற்றும் நீர் மாசடைவதோடு, நீர் கடத்தும் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும், நீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையிலிருந்து தற்போது முதல் போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 188 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில், இடதுபுறக்கால்வாயில் விநாடிக்கு 85 கனஅடி திறக்கப்படுகிறது. இந்நீர் செல்லும் பெரியமுத்தூர், துவாரகாபுரி, நெக்குந்தி உள்ளிட்ட கிராம பகுதி கால்வாயில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிக அளவில் கொட்டப்படுகிறது.

கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவு.

கழிவுகளில் 50 சதவீதம் கால்வாய் பகுதியில் தேங்குவதுடன், 50 சதவீதம் நீரில் அடித்து செல்லப்பட்டு அவதானப்பட்டி ஏரியில் சங்கமிக்கிறது. மேலும், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீருடன், கழிவும் வெளியேறுகிறது. மேலும், கால்வாயில் நீண்ட காலமாக தேங்கும் கழிவால், நீரின் தன்மை மற்றும் தரம் குறைவதோடு, நீர் கடத்தும் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும், நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நீர் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலையுள்ளது.

கால்வாயின் அடிப்பகுதியில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகிறது. இந்நீரைக் கால்நடைகள் பருகும் போது, அவை பாதிக்கும் நிலையுள்ளது. இயற்கையைச் சீரழிக்கும் பிளாஸ்டிக் கழிவைக் கால்வாயில் கொட்டுவதைத் தடுக்க கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் தீமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கழிவு கொட்டுவதைக் கண்காணித்து தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x