Last Updated : 04 Sep, 2023 05:53 PM

 

Published : 04 Sep 2023 05:53 PM
Last Updated : 04 Sep 2023 05:53 PM

மன்னார் வளைகுடாவில் அரிய வகை கடல் பசு!

மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பன் அருகே அமைந்துள்ள குருசடைத் தீவு.

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை கடல் பசுவை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ள மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட 21 தீவுகள் ‘மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக’ 1986-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படுத்தப் பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும். இப்பகுதியில் ஏராளமான பல்வகை கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. பேலனோ கிலாசஸ் என்ற கண்ணாடி புழு குருசடைத் தீவில் மட்டும் காணப்படும் உயிரினமாகும். அரிய வகையான கடல்பசு (டுகாங் டுகான்), டால்பின்கள், கடற்குதிரை, கடற்புல் உள்ளிட்டவை இப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.

மன்னார் வளைகுடாவில் காணப்படும் கடல் பசுவை மீனவர்கள் ஆவுலியா என அழைக்கின்றனர். மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, கட்ச் வளைகுடா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடல் பசுக்கள் காணப்படுகின்றன. நாட்டில் இவற்றின் எண்ணிக்கை 200 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடல் பசு 70 ஆண்டுகள் வரை வாழும். கடல்வாழ் பாலூட்டிகளில் மிகப்பெரிய தாவர உண்ணியான இவை கடற்புற்களை மட்டும் உண்ணும். சாதுவான, அமைதியான கடல் விலங்காகும். உடலின் முன்புறம் 2 பக்கவாட்டு துடுப்புகள் காணப்படுகின்றன. பின்புறம் துடுப்புகள் இல்லை. உடல் உருண்டையாகக் காணப்படும். இவ்வுடலை கொழுப்பு பொருட்கள் மூடி பாதுகாக்கின்றன. இரு நாசித்துவாரங்கள் தலையின் மேற்புறம் இருக்கும், செவிமடல் இருக்காது. வால் தட்டையாக துடுப்பு போன்று இருக்கும். கடற்பசுக்கள் குழுக்களாக காணப்படும்.

ஒரு பெண் கடற்பசு இனப்பெருக்கம் செய்ய 6 முதல் 17 ஆண்டுகள் ஆகின்றன. 13 முதல் 15 மாதங்கள் கர்ப்பக் காலம். ஈன்றெடுத்த பின் 18 மாதங்கள் வரை குட்டியை பாதுகாக்கும். இவை இரண்டரை ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு குட்டி ஈன்றெடுக்கும்.

இறைச்சிக்காகவும், தோல் மற்றும் கொழுப்புப்பொருட்களுக்காகவும் வேட்டையாடப்பட்டதாலும், இந்த இனம் உலகில் அரியதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களின் மடி வலைகளில் சிக்கியும், அதிவேக படகுகளில் அடிபட்டும் இறக்கின்றன. கடல் மாசுபடுவதால் கடற்புற்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் கடற்பசுக்களின் எண்ணிக்கை குறைகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள கடற்பசுக்களை பாதுகாக்க வேண்டும் என கடல் உயிரின ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

ஜகதீஷ் பகான் சுதாகர்

இதுகுறித்து மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வன உயிரினக் காப்பாளர் ஜகதீஷ் பகான் சுதாகர் கூறியதாவது: மத்திய, மாநில அரசு கள் கடல்பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. 2022-23-ம் ஆண்டில் இந்திய வன உயிரின நிறுவனம் சார்பில் தொண்டி பாக் நீரினை பகுதியில் கடற்பசுக்களை பாதுகாப் பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மீனவர்கள் மற்றும் வனத்துறை பாதுகாவலர்களால் வலையில் சிக்கிய 5 கடற் பசுக்கள் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டன. கடந்தாண்டும், அதற்கு முன்பும் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை கடல் பகுதியில் கடற்புற்களின் பரப்பை அதிகரிக்க கடற்புற்கள் நடப்பட்டன. கடல்பசு வலையில் சிக்கினால் கடலில் விடுவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாக் நீரிணை பகுதியில் 1,000 சதுர மீட்டரில் கடற்புற்களை வளர்ப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x