Published : 29 Aug 2023 03:20 PM
Last Updated : 29 Aug 2023 03:20 PM

நீலகிரியில் நலிவுற்ற தேயிலை ஆலைகளை மீட்க அந்நிய மரங்களை வெட்டி விறகாக வழங்க முடிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வனங்களை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை வெட்டி, அரசு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விறகாக வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 15,000 மெட்ரிக் டன் மரங்களை டான் டீ நிறுவனத்துக்கு வழங்க வனத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீதத்துக்கும் அதிக வனப்பரப்பு உள்ளது. இந்நிலையில், பெரும்பாலான வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் மற்றும் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, அவை குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால், மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், வனங்களில் ஆக்கிரமித்துள்ள அந்நிய தாவரங்களை அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள வனங்களில் இருந்து அகற்றப்படும் அந்நிய மரங்களை வெட்டி, அரசு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விறகாக வழங்கவும், மாவட்டத்திலிருந்து ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றவும், டான்டீ தேயிலை தொழிற்சாலைகளுக்கு மலிவான விலையில் விறகுகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட அரசாணைப்படி, சுமார் 15,000 மெட்ரிக் டன் மரங்களை அரசு நிர்ணயித்த விலையில், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்துக்கு ( டான் டீ ) வழங்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. சென்னா ஸ்பெக்டாபிலி என்ற அந்நிய ரக மரத்தை காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துவதன் சாத்தியக் கூறுகளை வனத்துறை ஆராய்ந்து வருகிறது.

இது குறித்து நீலகிரி கோட்ட வன அலுவலர் எஸ்.கௌதம் கூறும்போது, "மாவட்டத்திலுள்ள புல்வெளிகளை ஆக்கிரமித்துள்ள அயல்நாட்டு இனமான சீகை மரங்கள், டான்டீ தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் நீலகிரி காப்புக்காடுகளிலுள்ள அந்நிய மரங்களை வனத்துறையினர் வேரோடு அகற்றி வருகின்றனர்.

டான் டீ தொழிற்சாலைகளுக்கு விறகாக வழங்குவதன் மூலமாக, மரங்களை விரைவாக அகற்ற உதவும். டான்டீ நிறுவனத்துக்கு விறகு வழங்குவது, நலிவடைந்துள்ள தேயிலை தொழிற்சாலைகள் நீண்ட காலத்துக்கு அதிக லாபம் ஈட்ட உதவும். ஒப்பந்ததாரர் கட்டணம் மற்றும் இடைத்தரகர்கள் இடையூறு இருக்காது.

இந்த நடவடிக்கையை இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளதுடன், மாவட்டத்திலுள்ள மற்ற தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் இந்த முறையை விரிவுபடுத்தலாம் என்று கூறியுள்ளனர்" என்றார்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "தனியார் தேயிலைத் தோட்டங்களுக்கு மானிய விலையில் அயல்நாட்டு ஆக்கிரமிப்பு மரங்களிலிருந்து விறகுகளை வழங்குவது, வனங்களிலுள்ள அந்நிய மரங்களை விரைவாக அகற்ற ஊக்கமளிக்கும். மேலும், நலிவுற்ற தேயிலை தொழிற்சாலைகளை மீட்டெடுக்க உதவும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x