Published : 27 Aug 2023 05:38 PM
Last Updated : 27 Aug 2023 05:38 PM
கூடலூர்: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங் களில் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தள், கார்த்திகைப் பூ போன்ற பெயர்களில் செங்காந்தள் மலர் அழைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் இந்த மலர், தமிழ்நாட்டின் மாநில மலராக திகழ்வது மிகவும் சிறப்புக்குரியது. ‘Gloriosa Superba’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்து பாகங்களிலும் ‘கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
கார்த்திகை மாதத்தில் பூக்கும் செங்காந்தள், வேலிகளில் மட்டுமல்ல, சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. மலைகள் மற்றும் சரிவுகளில், அழகிய விரல்களைப் போலவும், சுடர்களை போலவும் செங்காந்தள் பூ காட்சியளிக்கும்.
தாவரவியல் நிபுணர் எஸ்.ராஜன் கூறியதாவது: செங்காந்தள் மலர்ச் செடியின் வேர்ப்பகுதியை கண்வலிக்கிழங்கு, கலப்பைக்கிழங்கு, வெண்தோன்றிக்கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று மக்கள் அழைக்கிறார்கள். செங்காந்தள் செடியின் கிழங்கில் இருந்துதான் புதிய கொடிகள் கிளைவிட்டுப் படரும்.
இலைகளின் நுனி நீண்டும், சுருண்டும் பற்றுக் கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றை பற்றிப்பிடித்து வளரக் கூடியது. இதன் இலைகளுக்கு காம்பு கிடையாது. ஆனால், கிழங்கின் ஒவ்வொரு பகுதியின் முனையிலும் புதிய கணு முளைக்கும். இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடன் பூக்கும் இந்த மலர் பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறம் மாறிக்கொண்டே போகும். பூக்களின் நிறம் வேறுபடுவதால், வெண்காந்தள் என்றும், செங்காந்தள் என்றும் கூறப்படுகிறது, என்றார்.
கண்வலிப் பூ: இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று பழங்குடியினரிடையே நம்பப்படுகிறது. இதனால், கண்வலிப் பூ என்றும் இதை அழைக்கிறார்கள்.
இது தொடர்பாக பழங்குடியின மக்கள் கூறியதாவது: எங்கள் பாஷையில் செங்காந்தள் மலரை ‘நீர்கண்’ செடி என அழைக்கிறோம். இந்த மலர்களை பார்த்தால் கண்களில் வலி வரும் என நம்பப்படுகிறது. மேலும், கண்களில் தண்ணீர் வரும். எனவே, குழந்தைகளை செடியின் அருகே விடமாட்டோம். செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாக செயல்படுவதாக கூறப்படுகிறது. செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய் பரவாமல் தடுக்கும் கோல்ச்சிசின் செங்காந்தளின் விதை, கிழங்கில் அதிகமாக உள்ளது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி உட்பட பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் செங்காந்தள் மலர்கள் அதிகம் பூத்துக் குலுங்குகின்றன. கேரள மக்களால் ஓணம் பண்டிகைக்கு அதிகம் பயன்படுத்துவதால் ஓணப் பூ என்றும் செங்காந்தளை அழைக்கின்றனர்.
தோட்டக்கலைத் துறை சார்பில் பல மாவட்டங்களில் விவசாயப் பயிராக பயிரிட உதவிகள் மானியங்கள் வழங்கப்படுகின்றன. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயற்கையாக விளையும் இந்த செடியை விவசாயத்துக்கு ஊடுபயிராக அறிமுகப்படுத்தினால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். இதன் வேரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சேகரித்து, 100 கிராம் ரூ.2000 வரை விற்பனை செய்கின்றனர். தமிழக அரசு தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் கொடுத்து, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் செங்காந்தள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT