Last Updated : 20 Aug, 2023 04:07 PM

 

Published : 20 Aug 2023 04:07 PM
Last Updated : 20 Aug 2023 04:07 PM

உலக சாதனையில் இடம்பிடித்த பண்ணைக் குட்டைகள் இனி பயன்பாட்டுக் குளங்கள் @ திருப்பத்தூர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உலக சாதனையில் இடம் பிடித்த பண்ணைக்குட்டைகளை பொது மக்களின் பயன்பாட்டு குளங்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் நிலத்தடி நீர் அதிக ஆழத்துக்கு சென்ற பகுதிகள் குறித்த கணக்கெடுப்பை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த 2012-ம் ஆண்டு ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டது. அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், மாதனூர், கந்திலி ஆகிய 3 ஒன்றியங்களில் 1,200 அடிக்கு கீழே நிலத்தடி நீர் சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தது.

விவசாயம் சார்ந்த தொழில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பேரிடியாக விழுந்தது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தால் பாலாற்றில் ஓரிரு நாட்களுக்கு மழை வெள்ளம் ஏற்படும்.

அதைக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரும் 1,200 அடிக்கு கீழே சென்றதால் எதிர்காலத்தில் விவசாய தொழில் மட்டுமின்றி குடிக்கக்கூட மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் தொற்றிக்கொண்டது.

ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

இருப்பினும், திருப்பத்தூர் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனின் பெரும் முயற்சியால் மாவட்டம் முழுவதும் 1,400 பண்ணைக்குட்டைகளை அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, இலக்கை தாண்டி 1,546 பண்ணைக்குட்டைகளாக வெட்டி முடிக்கப்பட்டது.

இதற்காக உலக சாதனை புத்தகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் இடம் பிடித்தது. இந்நிலையில், வெட்டப்பட்ட பண்ணைக் குட்டைகளால் சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரம் உயரும் என்பதால் இந்த பண்ணைக்குட்டைகளை பொதுமக்களின் பயன்பாட்டு பராமரிப்பு குளங்களாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் அம்பலூர் அசோகன் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 1,500-க்கும் மேற்பட்ட பண்ணைகுட்டைகள் வெட்டப்பட்டுள்ளது பாராட்டுக் குரியது. மத்திய அரசின் வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023-ம், தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் ஆகிய இரண்டுமே தனியாருக்கு சாதகமானதாக உள்ளன.

ஆர்வலர் அம்பலூர் அசோகன்

மத்திய அரசின் வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023-ல் சுற்றுச்சூழல் அதிக பாதிப்புக்கும், நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்படும் என்ற பெரிய அச்சம் எங்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் தற்போது உள்ள பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள ஏரிகள் தனியார் வசம் செல்ல வாய்ப்புள்ளது.

நீர் நிலை அமைப்புகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உலக சாதனையாக கருதப்படும் பண்ணைக்குட்டைகளை பொதுமக்களின் பயன்பாட்டு பராமரிப்பு குளங்களாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்தால் எந்த நோக்கத்துக்காக பண்ணைக் குட்டை ஏற்படுத்தப்பட்டதோ அந்த முயற்சி முழுமையான வெற்றியை பெரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேலும், திறந்த நிலையில் உள்ள பண்ணை குட்டைகளால் மனித உயிருக்கும், காட்டு விலங்களுக்கும் எந்நேரமும் ஆபத்து உள்ளதால், அனைத்து பண்ணை குட்டைகளையும் பயன்பாட்டு பராமரிப்பு குளங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x