Last Updated : 19 Aug, 2023 04:21 PM

 

Published : 19 Aug 2023 04:21 PM
Last Updated : 19 Aug 2023 04:21 PM

கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பதை தடுக்க மின் கம்பங்களுக்கு இரும்பு வேலி

மேலுமலை வனப்பகுதியில் யானைகள் செல்லும் வழித்தடத்தில் உள்ள மின்கம்பங்களில் இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ள்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானை வழித்தடங்களில் உள்ள மின்கம்பங்களில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திர மாநில எல்லை அருகே அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம். இதன் மொத்த பரப்பளவான 5.43 லட்சம் ஹெக்டேரில், 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி. இது 115 காப்புக்காடுகளைக் கொண்டுள்ளது. வனப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வனஉயிரின சரணாலயத்தில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறி, தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள தளி வனப்பகுதியில் தேவர்பெட்டா எனும் கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் நுழைகிறது.

பின்னர் அங்கிருந்து ஜவளகிரி, நொகனூர், ஊடேதுர்க்கம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வனச்சரகங்களுக்கு உட்பட்ட காப்புக் காடுகளில் தஞ்சம் அடைகிறது. மீண்டும் கர்நாடக மாநிலம் கோலார் வனப்பகுதி வழியாக, ஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதிக்கு செல்கிறது.

அவ்வாறு செல்லும் யானைகள், ரயிலில் மோதியும், கிணற்றில் தவறி விழுந்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர், மின்வாரியத் துறையினர், யானை வழித் தடங்களில் உள்ள மின்கம்பங்களில் இரும்பு வேலி அமைத்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறும்போது, மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றப்பட்டும், தேவையான இடத்தில் உயர்த்தப்பட்டும் உள்ளன. இதே போல் மின்கம்பங்களை யானை சேதப்படுத்தி, அவை கீழே விழும்போது, மின்வயரில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மின்கம்பத்தைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்துள்ளோம்.

இதனால் யானைகள் மின்கம்பத்தை ஒட்டிச் சென்றாலும், கம்பத்தை எதுவும் செய்யாது. தாழ்வாக சென்ற மின் கம்பிகளும் உயர்த்தி அமைக்கப் பட்டுள்ளன. யானை வழித் தடங்களில் அந்தந்த பகுதியில் மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்வதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x