Last Updated : 11 Aug, 2023 06:47 PM

 

Published : 11 Aug 2023 06:47 PM
Last Updated : 11 Aug 2023 06:47 PM

தமிழகத்தில் விரைவில் யானை வழித்தடங்கள் அறிவிப்பு: வனத்துறை அமைச்சர் உறுதி

வனத்துறை சார்பில் கோவையில் இன்று நடைபெற்ற யானைகள் பாதுகாப்பு தொடர்பான மாநாடு.

கோவை: தமிழகத்தில் விரைவில் யானை வழித்தடங்கள் அறிவிக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

வனத்துறை சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக யானைகள் பாதுகாப்பு தொடர்பான 2 நாட்கள் மாநாடு கோவையில் இன்று (ஆக.11) தொடங்கியது. இதில்,வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு, முகாம் யானைகள் மேலாண்மை தொடர்பான கையேட்டினை வெளியிட்டனர்.

தொடர்ந்து, மாநாட்டில் அமைச்சர் மா. மதிவேந்தன் பேசும்போது, ''யானை வழித்தடங்களை கண்டறியவும், தற்போதைய நிலையில் அவற்றை பராமரிக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் மனித - விலங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன. யானைகள் தாங்கள் விரும்பும் பயிர்களை உட்கொள்ள வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

யானை வழித்தடங்களில் உள்ள சட்டவிரோத மின்வேலிகள், வணிக ரீதியிலான கட்டிடங்களும் யானைகளின் வாழிடத்தைப் பாதிக்கின்றன. யானைகளை பாதுகாப்பதில் சிறப்பாக பங்களித்து வருவோருக்கு புகழ்பெற்ற வன கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் விருது வழங்கப்படும்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.மதிவேந்தன் கூறும்போது, ''ஏற்கெனவே தமிழகத்தில் சில யானை வழித்தடங்களை உறுதி செய்துள்ளோம். மேலும் சில வழித்தடங்களை உறுதிப்படுத்துவதில் சில சந்தேகங்கள் உள்ளன. அதற்காக ஆய்வுப்பணிகள் தொடங்கி, முடியும் நிலையில் உள்ளது. கூடிய விரையில் யானை வழித்தடங்கள் அறிவிக்கப்படும்.

வனத்துக்குள் யானைகளுக்கு உணவு தேவையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்பை கிடங்கை அங்கிருந்து இடம்மாற்றவும், குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசும்போது, ''மலையிட பாதுகாப்பு குழும (ஹாகா) பகுதியில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஆய்வு செய்து, எந்த அளவில் செய்ய வேண்டுமோ அந்த அளவில்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்காக யானை வழித்தடங்கள், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.

இம்மாநாட்டில் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, வண்டலூர் நவீன வன உயிரின பாதுகாப்பு நிலைய இயக்குனர் உதயன், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x