Published : 07 Aug 2023 04:21 PM
Last Updated : 07 Aug 2023 04:21 PM
கோவை: சுற்றுச்சூழலுக்கு பேரச்சுறுத்தலாக உள்ள மக்காத குப்பையை கையாள்வதில் உள்ளாட்சி அமைப்புகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மனிதனால் உருவாக்கப்படும் குப்பையில், ஒருமுறை பயன்படுத்தியவுடன் தூக்கி எறியும் பழக்கத்தால் உருவாக்கப்படும் குப்பையின் அளவே அதிகமாக உள்ளது.
நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் என லட்சக் கணக்கானோரால் தினமும் வீசியெறியப்படும் பந்து முனை (பால் பாயின்ட்) பேனாக்களின் அளவைக் கணக்கிட்டால், அவை பலநூறு டன்களைத் தாண்டும்.
மை ஊற்றி எழுதும் பேனாக்கள் சிறிது பராமரிப்பைக் கோருபவை. தினமும் மை நிரப்ப வேண்டும். சில நேரங்களில் மை ஒழுகுவதால் கை விரல்கள் மற்றும் சட்டைப்பைகளில் மை கறை படியலாம். ஆனால், பந்து முனை பேனாக்களுக்கு இத்தகைய பராமரிப்பு தேவையில்லை. விலையும் குறைவென்பதால், பத்திரப்படுத்தி வைக்க வேண்டியதில்லை. மை தீர்ந்தவுடன் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய ஒன்றை வாங்கிக் கொள்ளலாம்.
இதுபோன்ற மலிவான சௌகர்யங்களுக்காகவும், நம்முடைய சோம்பேறித்தனத்தாலும், மீண்டும் பயன்படுத்தத்தக்க மை பேனாக்களை கைவிட்டு, மலிவுவிலை பந்துமுனை பேனாக்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இந்நிலையில், பந்துமுனை பேனாக்களை கைவிட்டு, மை பேனாக்களை பயன்படுத்த வேண்டி, தான் பணியாற்றும் இடங்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்,
கோவையில் உள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தில் துணை இயக்குநராக பணியாற்றிவரும் க.பாலு. இதற்காக பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மாணவர்களுக்கு மை பேனாக்களையும் வழங்கி வருகிறார். தான் ஆணையராக முன்பு பணியாற்றிய குன்னூர், மயிலாடுதுறை, வால்பாறை நகராட்சி அலுவலகங்களில் பந்துமுனை பேனாக்களுக்கு தடையும் விதித்திருந்தார். உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், தானும் கடந்த 4 ஆண்டுகளாக மை பேனாவையே பயன்படுத்தி வருகிறார்.
இந்த விழிப்புணர்வு முயற்சி குறித்து க.பாலு கூறியதாவது: பந்துமுனை பேனாக்கள் ‘பயன்படுத்து-தூக்கியெறி’ என்ற கலாச்சாரத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்கின்றன. அதோடு, அலட்சிய மனப்பான்மையை வளர்த்து, சுற்றுச்சூழல் மீது அக்கறையற்றவர்களாகவும் மாற ஒரு காரணமாகின்றன. எனவேதான், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
மை பேனாக்கள் நீடித்து உழைக்கக் கூடியவை. நன்கு பராமரிக்கப்படும் ஒரு மை பேனா பல ஆண்டுகள் உழைக்க வல்லது. தொடர்ந்து பயன்படுத்தும்போது பயன்படுத்துபவரின் பிடிகோணத்துக்கு ஏற்ப, அதன் எழுதுமுனை தேய்ந்து நன்கு வழுவழுவென்று எழுதுவதோடு, அவருக்கே உரித்தான பேனாவாக, அவரோடு நீண்டகாலத்துக்குப் பந்தப்பட்டிருக்கும்.
மறு சுழற்சி செய்வது கடினம்: மை பேனாவின் விலை, மலிவுவிலை பந்துமுனை பேனாவைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தாலும், நீண்ட கால நோக்கில் மை பேனாக்கள் சேமிப்பையே தருகின்றன. நாம் பயன்படுத்தும் பந்துமுனை பேனாக்கள் பெரும்பாலும் மறுசுழற்சிக்கு செல்வதில்லை. அப்படியே சென்றாலும், மூடிகள், வெளிக்கூடு, ரப்பர் உறை என அதன் ஒவ்வொரு பாகமாக பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். இது அதிக மனித உழைப்பைக் கோரும் பணியாகும்.
கழிவு மேலாண்மையின் முக்கியமான படி, கழிவு உருவாவதைக் குறைப்பதே ஆகும். மறுசுழற்சி செய்வதென்பது கழிவு மேலாண்மையில் இறுதி நிலையே. நம்மால் உருவாக்கப்படும் கழிவுகள் அனைத்தையும் மறு சுழற்சி செய்வது கடினம். மேலும், மறு சுழற்சிக்கு தொழில் நுட்ப உதவியும், இயந்திரங்களும் தேவை. அதே சமயம் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் முடிந்த வரையில் மீள் பயன்பாட்டுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கழிவு உருவாதலைக் குறைக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT