Published : 18 Nov 2017 12:26 PM
Last Updated : 18 Nov 2017 12:26 PM

பறவை ஆர்வலராக எளிய வழி!

பறவை நோக்குபவனாக (Bird watcher) என்னுடைய வயது ஒன்று. கடந்த ஓராண்டில் தெரிந்துகொண்ட பறவை இனங்களோடு சேர்த்து, மேலும் பல இனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விருப்பம் என் மனதில் இருந்தது. இந்நிலையில் எழில் சூழ்ந்த ஏலகிரி மலையில் ‘தமிழ்ப் பறவை ஆர்வலர்களின் கூட்ட’த்தில் கலந்துகொண்டேன். அங்கு பறவைகளை இனம் காண முடிந்ததைப் போலவே நிறைய இயற்கை ஆர்வலர்களையும் இனம் காண முடிந்தது.

பறவைகளின் இசைக் கச்சேரி

இரண்டாம் நாள் காலை… இரவு சரியான உறக்கம் இல்லையென்றாலும், ஏலகிரிப் பறவைகளின் பாடல்களும் அழைப்புகளும், அதிகாலையிலேயே எழுப்பிவிட்டன. அங்கு இதமான குளிர் நிலவியது. குளிருக்குச் சுகமளிக்கும் நெருப்புபோல, பறவைகளின் சத்தங்கள் அமைந்தன. குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசை நோக்கி, பறவைகளை ரசிப்பதற்கு நடைப்பயணத்தைத் தொடங்கினோம். பறவைகள் வந்து செல்வதற்காக அனைத்துத் திசைகளிலும் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன

18chnvk_malabar_whistling_thrush.jpg சீகாரக் குருவி

நிறைய பறவைகளை இனம் காண முடிந்தது. அனுபவமிக்க பறவை ஆர்வலர்கள் உடன் இருந்ததால், நிறைய செய்திகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. இருநோக்கியைக் கொண்டு பார்வையிட்டபோது, உச்சிக் கிளையின் முனையில் மீசையுடன் கூடிய அழகான செம்மார்புக் குக்குறுவான் (காப்பர்ஸ்மித் பார்பெட்) இளைப்பாறிக்கொண்டிருந்தது. ‘குக்…குக்…குக்’ என தொடக்க இசை அமைத்த குக்குறுவானுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ‘குட்று…குட்று…குட்று’ என வெண்கன்னக் குக்குறுவானுடைய (வொயிட் சீக்டு பார்பெட்) அதிரும் இசை அமைந்திருந்தது.

காலை தொடங்கிய அவற்றின் இசைக் கச்சேரி நாள் முழுவதும் தொடர்ந்தது. வால் காக்கைகள் (ரூஃபஸ் ட்ரீபை), கொண்டு கரிச்சான்கள் (ஓரியண்டல் மக்பை ராபின்), செம்மீசைச் சின்னான் (ரெட் விஸ்கர்டு புல்புல்), கொண்டைக்குருவி (ரெட் வெண்டட் புல்புல்), வெள்ளைக்கண்ணி (ஓரியெண்டல் வொயிட் ஐ) போன்ற பறவைகள் ஆங்காங்கே தென்பட்டன. அவற்றின் குரல்களும் செவிக்கு விருந்து படைத்தன.

பென்குயினின் மாயத் தோற்றம்

காடுகளில் இருந்த காய்ந்த முள்வேலிகளில் கீச்சான் குருவிகள் ஓய்வெடுப்பதைப் பார்க்க முடிந்தது. கரிச்சான் குருவியில், ‘வெள்ளை வயிற்றுக் கரிச்சான்’ (வொயிட் பெல்லீடு ட்ராங்கோ) எனும் வகையைப் பார்த்தவுடன், அதை விட்டு நகர எனது விழிகள் மறுத்தன. உடல் முழுவதும் கருப்பு நிறம், வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறம் எனக் கொள்ளை அழகு. சற்றுப் பருத்தும் உயர்ந்தும் இருந்தால், பென்குயின்கள்போல மாயத்தோற்றத்துடன் ‘வெண்வயிற்றுக் கரிச்சான்கள்’ தோன்றுகின்றனவோ என்கிற எண்ணம் என் மனதில் ஓடியது.

18chnvk_coppersmith_barbet.jpg செம்மார்புக் குக்குறுவான் rightபறவைகளோடு மலையேற்றம்

பறவைகளைப் பார்த்துக்கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட எங்கள் குழு, அருகிலிருந்த சிறு மலையைப் பார்த்ததும், ‘நடைப்பயணத்தை மலையேற்றமாக மாற்றினால் என்ன’ என்கிற எண்ணத்தோடு மலையில் ஏறத் தொடங்கினோம். பறவைகளோடு மரங்களையும் ரசித்துக்கொண்டு, மலையின் உச்சியில் ஓய்வெடுத்தோம்.

கழுகுகள் வட்டமிட்டு மேலே பறந்து வந்ததும் எழுந்திருந்தோம். அருகிலிருந்த கடுக்காய் மரத்தின் உச்சியில் ஆரஞ்சு மின்சிட்டு (ஆரெஞ்ச் மினிவெட்) அமர்ந்திருந்தது. பசுமையான இலைகளில் அசையும் செம்மஞ்சள் நிறப் புள்ளியைப் போல அந்த மின்சிட்டு இலைகளின் பின்னணியில் இடம் மாறிக்கொண்டே இருந்தது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு கீழே இறங்கத் தொடங்கினோம். எண்ணிலடங்கா தட்டான்கள் எங்களோடு கீழிறங்கின. ‘நகரத்தில் கொசுக்களுக்கு பயந்து வாழும் வாழ்க்கையை புறந்தள்ளிவிட்டுப் பேசாமல் இந்தக் காட்டில் கொசுத் தொல்லையில்லாமல் வாழ்ந்தால் என்ன’ என்று மனதுக்குள் தோன்றியது. தட்டான்கள் இருக்கும்போது, கொசுக்களைப் பற்றி என்ன கவலை? மலையேற்றத்துடன் கூடிய பறவை பார்த்தல் நிகழ்வு புத்துணர்ச்சி தரும் செவ்விளநீர் பானம் போல அமைந்தது.

18chnvk_white_cheeked_barbet.JPGஒரு எளிய வழி

அழிந்துவரும் பாறுக் கழுகுகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை, ஆந்தைகளின் இரவு, கண்ணகிப் பாதையில் பறவைகள், பறவைகளின் ஒலியியல், ‘ஈ பேர்டு’ வலைத்தளம், பள்ளி மாணவர்களின் பறவைகள் என நிறைய செய்திகள் செவிக்கும் கண்களுக்கும் இதமளித்தன. ஒளிப்படக்கருவி, தொலைநோக்கியின் நுணுக்கங்கள், பறவைகளின் நுணுக்கங்கள் என இரண்டு நாள் பறவை உலாவில் நான் பார்த்த பறவைகளின் எண்ணிக்கை தந்த மகிழ்ச்சியை மேம்படுத்தின. பறவை பார்த்தல், வெளியுலகத் தொடர்பில்லா இயற்கை நெருக்கம் என இரு நாட்களும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ முடிந்தது.

நீங்களும் பறவைகள் உலகத்தில் நுழைய வேண்டுமா!... ‘Call of Malabar whistling thrush’ எனப்படும் சீகாரக் குருவிப் பறவையின் பாடலை இணையத்தில் ரசித்துப் பாருங்கள்... மதிமயங்கி பறவை ஆர்வலராய் மாறிவிட வாய்ப்புகள் அதிகம்! அது பாடும் கீதத்தை ரசிக்க இரண்டு செவித்திரைகள் போதாது.

கட்டுரையாளர், பறவை ஆர்வலர் மற்றும் சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x