Published : 04 Aug 2023 03:41 PM
Last Updated : 04 Aug 2023 03:41 PM

பாம்புகளை வேட்டையாடும் ‘ஆழி கழுகுகள்’ - சர்வதேச அறிவியல் இதழில் இடம்பிடித்த மதுரை ஆய்வாளர்களின் கட்டுரை

மின் கோபுரத்தில் கூடு கட்டி வசிக்கும் ஆழி கழுகு

மதுரை: மதுரை பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன், ஆய்வாளர் பைஜு மற்றும் மாணவர் மதியழகன் ஆகியோர் நடத்திய ஆய்வில், ராமநாதபுரம் புதுமடம் கடற்கரை கிராமத்தில் தென்பட்ட அரிய வகை ஆழி கழுகுகள், உயர் அழுத்த மின் கோபுரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

புராணங்களில் கருடன் என்று சொல்லப்படும் ‘ஆழி கழுகு’ பாற்கடலில் துயில்கொள்ளும் பெருமாளின் வாகனமாக கருதப்படுகிறது. காலப்போக்கில் மக்கள், செம்பருந்து இனத்தை கருடன் எனக் கருதி விட்டனர்.

ஆனால், இந்த ஆழி கழுகுகள்தான் கடல் பாம்புகளையும், பெரிய மீன்களையும் வேட்டையாடி உயிர் வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் இவை இணையாகவும், மற்ற காலங்களில் தனியாகவும் வாழும். வேறு பறவைகள் சீண்டினால், அவற்றை உக்கிரமாகத் தாக்கும் திறன் படைத்தவை. மக்களை விட்டு ஒதுங்கி அமைதியாக வாழும் கழுகு இனமாக இவை கருதப்படுகின்றன. பெரும்பாலும் பெரிய நிலப்பரப்பில் கடற்கரை ஓரங்களிலேயே இவை வசிக்கும்.

ரவீந்திரன் நடராஜன்

கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் மதுரையைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலர்கள் ரவீந்திரன் நடராஜன், பைஜூ ஆகியோர் தலைமையிலான குழுவினர், ராமநாதபுரம் புதுமடம் கடற்கரைப் பகுதியில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது ராமநாதபுரம் புதுமடம் பகுதியில் இந்த பறவைகள் இனப்பெருக்கத்தை கண்டறிந்தனர். இவர்கள் நடத்திய ஆழி பறவை ஆய்வுகளை சர்வதேச அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் ஜர்னல் ஆஃப் த்ரெட்டன்டு டாக்ஸா (Journal of threatened Taxa) வெளியிட்டுள்ளது.

பைஜூ

இதுகுறித்து பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது: பெரும்பாலும் கழுகுகளும், ஒரு சில நாரைகளுமே இதுபோன்ற பெரிய கூடுகளை கட்டும். அடுத்த 100 அடிக்குள் மற்றொரு மின் கோபுரத்தில் இதுபோல் ஒரு பெரிய கூடு இருந்தது. நாங்கள் நெருங்கி சென்று ஆய்வு செய்தபோது, ஆழி கழுகுகளின் கூடு என்பதை உறுதி செய்தோம்.

மேற்கு கடற்கரையில் குஜராத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், வங்கதேசம், தென் கிழக்காசிய தீவுகள், ஆஸ்திரேலியா வரை இந்தப் பறவை இனம் காணப்படுகிறது. இந்த பறவையின் கூடுகள் மிக அரிதாகவே தென்படும். இந்த கழுகுகள் பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட கட்டுரைகள், சர்வதேச அளவிலும் குறைவாகவே உள்ளன.

வனத்துறை பணியாளர்கள், ஆய்வு மாணவர்கள் உதவியுடன் கூடு அமைந்துள்ள பகுதியை கடந்த நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆய்வு செய்தோம். அப்பகுதியில் 4 மின் கோபுரங்களில் கூடுகள் இருந்தன. சில நேரங்களில் இதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட கூடுகளை கட்டி, மற்ற பறவைகளை குழப்பமடைய செய்யும். ஆனால், அதில் ஏதாவது ஒரு கூட்டில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த வகையிலே, இந்தப் பறவையினமும், புதுமடம் பகுதியில் தான் கட்டிய 4 கூடுகளில் ஒன்றில் மட்டும் இனப்பெருக்கம் செய்தது.

மனிதர்கள் எளிதில் ஏற முடியாத உயரமான மின்கோபுரத்தை கூடுகள் கட்ட இவை தேர்வு செய்கின்றன. இதுபோன்ற கழுகினங்கள் ஒன்று, இரண்டு முட்டைகள்தான் இட்டு அடை காக்கும். அதில் ஒன்றுதான் உயிர் பிழைத்து வாழும்.

குஞ்சுகள் கூட்டில் இருக்கும்போது ஆண், பெண் பறவை கூட்டுக்கு மேல் பறந்து கண்காணிக்கும். ஆழி கழுகுகள் மிக உயரத்தில் பறக்கும்போது, மற்ற பறவைகள் இவற்றின் கூட்டை தாக்க முயன்றால் அவை செங்குத்தாக கீழிறங்கி எதிரி பறவைகளை துரத்தி தாக்கும் காட்சி காண்போரை மயிர் கூச்செரியச் செய்யும்.

கூட்டில் குஞ்சுகள் இருக்கும்போது ஆண், பெண் பறவைகள், ஒரே மாதிரியாக சீராக வானில் பறந்து தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு கூடு இருக்கும் பகுதியை சுற்றி மற்ற பறவைகளுக்கு தங்கள் எல்லையை உணர்த்தும் நிகழ்வை நாங்கள் பதிவு செய்தோம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை, தென்னை போன்ற மரங்கள் அதிகமாக பயன்பாட்டில் இல்லாது, வேறு பெரிய மரங்களும் அருகி விட்டன. இதனாலேயே இவை கூடுகட்ட மின் கோபுரங்களை தேர்வு செய்கின்றன என்ற சந்தேகம் உள்ளது.

"பறவைகளின் இயல்பும், எண்ணிக்கையும் மாறுவது சூழலில் நிகழும் மாற்றங்களின் எதிரொலி என்பர். பல்வேறு மரங்களை நாடு முழுவதும் நடுவது ஒன்றே கால மாற்றத்தின் தேவை ஆகும். இல்லையெனில் அரியவகை பல்லுயிர்களை பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x