Published : 02 Aug 2023 01:41 PM
Last Updated : 02 Aug 2023 01:41 PM

தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக பெள்ளி நியமனம்

சென்னை: நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள வி.பெள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்.

இது குறித்த தமிழக அரசின் செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் (பராமரிப்பாளர்) பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.

பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடியும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்ட வருகையின் போது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தற்போது, தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் வி. பெள்ளியை, ஆதரவற்ற யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 02) வி. பெள்ளியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, பெள்ளியின் கணவரும் யானை பராமரிப்பாளருமான பொம்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x