Published : 01 Aug 2023 04:28 PM
Last Updated : 01 Aug 2023 04:28 PM

‘குறுங்காடுகள்’ ஆன குப்பை மேடுகள் @ தென்காசி

தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைமேடாக புதர் சூழ்ந்து காணப்பட்ட இடம், தற்போது பசுஞ்சோலையாக காணப்படுகிறது

தென்காசி: தென்காசி ஆசாத் நகரில் சிற்றாற்றின் குறுக்கே உள்ள 2 பாலங்களுக்கு இடையே நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுமார் 40 சென்ட் பரப்பளவுள்ள காலி இடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குப்பைமேடாக கிடந்தது.

தென்காசி ப்ராணா மரம் வளர் அமைப்பு சார்பில் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று, கடந்த 2018-ம் ஆண்டு அங்கு மியாவாகி அடர்வனம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இங்கு நடவு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட மரங்கள் இரண்டே ஆண்டில் ஓங்கி வளர்ந்தன. தற்போது இந்த அடர்வனம் பசுஞ்சோலையாக காணப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் சிற்றாற்றின் கரையையொட்டி பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்புக்குச் சொந்தமான காலியிடத்தில், குப்பைகளை அகற்றி இரண்டாவது மியாவாகி அடர்வனம் அமைக்கும் பணியை கடந்த 2020-ம் ஆண்டில் மேற்கொண்டனர். சுமார் 50 சென்ட் பரப்பளவில் உள்ள இடத்தில் 60 வகையான 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரங்களும் 3 ஆண்டுகளுக்குள் வேகமாக வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது.

இது குறித்து ப்ராணா மரம் வளர் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் கூறும்போது, “ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் அஹிரா மியாவாகி என்பவர் குறுகிய இடத்தில் நெருக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்து, அவை வழக்கமான முறையில் வளர்க்கப்படும் மரங்களை விட, 10 மடங்கு வேகமாக வளர்வதை நிரூபித்துக் காட்டினார். அதனால் மரக்கன்றுகளை அடர் நடவு செய்து உருவாக்கப்படும் வனத்துக்கு மியாவாகி அடர்வனம் என பெயர் ஏற்பட்டது.

தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை பகுதிகளில் அந்தந்த நகராட்சிகளுடன் இணைந்து மியாவாகி அடர்வனத்தை உருவாக்கியுள்ளோம். மேலும், தென்காசி அரசு ஐடிஐ உடன் இணைந்த வளாகத்தில் சமீபத்தில் மியாவாகி அடர்வனம் அமைக்க மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சி கன்றுகளை பராமரிக்க வேண்டும்.

அதன் பின்னர் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. சூரிய ஒளியை பெற போட்டி போட்டு வளர்வதால் மரக்கன்றுகள் வேகமாக வளர்கின்றன. தன்னார்வ அமைப்புகளும் அரசும் இணைந்து மியாவாகி அடர்வனங்களை கூடுதலாக உருவாக்கினால் மழையை ஈர்க்கலாம். ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கும்” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x