Last Updated : 24 Jul, 2023 05:41 PM

 

Published : 24 Jul 2023 05:41 PM
Last Updated : 24 Jul 2023 05:41 PM

மின் கம்பிகளில் சிக்கி அழியும் பழந்தின்னி வவ்வால்கள் - வைகுண்டம் பகுதியில் சரணாலயம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மின் கம்பிகளில் அடிப்பட்டு அரிய வகை பாலூட்டி இன பறவையான பழந்தின்னி வவ்வால்கள் அழிந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க இப்பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் பழந்தின்னி வவ்வால் களும் ஒன்று. ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்கின்றன. சோனகன்விளை, சாத்தான்குளம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த வவ்வால்கள் காணப்படுகின்றன. இவை உயரமான மருதமரங்களில் வசித்து வருகின்றன.

இலங்கை வரை பறக்கின்றன: பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும். மேலும் இங்கிருந்து வவ்வால்கள் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து இலங்கைக்கு சென்று இரை தேடி விட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்துவிடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாலுட்டி இனத்தை சேர்ந்தவை இந்த அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அண்மை காலமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் பழந்தின்னி வவ்வால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஓரிரு தினங்களில் மட்டும் புதுக்குடி, சாத்தான்குளம், சோனகன்விளை பகுதியில் பல வவ்வால்கள் மின் கம்பிகளில் இறந்த நிலையில் தொங்குவதை காண முடிந்தது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

இது குறித்து சிவகளை காடுபோதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மாணிக்கம் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று பழந்தின்னி வவ்வால்கள். சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, உயிரின பெருக்கம் போன்றவற்றில் இந்த வவ்வால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

அண்மை காலமாக இந்த வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றன. தற்போது ஆடி மாத காற்று மிகவும் வேகமாக வீசி வருவதால் இரவில் இரை தேடி சென்றுவிட்டு அதிகாலையில் திரும்பி வரும் வவ்வால்கள் மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. மெல்லிய இறகுகளை கொண்டதாக இருப்பதால் வவ்வால்கள் எளிதாக மின் கம்பியில் சிக்குகின்றன.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை விட, இரு கம்பிகளுக்கு இடையே இறக்கை சிக்கி அதிக வவ்வால்கள் உயிரிழக்கின்றன. மேலும், இறந்த வவ்வால்கள் மின் கம்பியில் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை காணும் மற்ற வவ்வால்களும் அந்த பகுதிக்கு வந்து உயிரை இழக்கின்றன. தினமும் பல வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்து தொங்குவதை ஆங்காங்கே காண முடிகிறது.

இந்த அரிய வகை வவ்வால்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பகுதியில் காணப்படும் மின் கம்பிகளில் பி.வி.சி குழாய்களை மாட்டிவிட வேண்டும். அதன் மூலம் வவ்வால்கள் கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கலாம்.

மேலும், இறந்து தொங்கும் வவ்வால்களை உடனுக்குடன் அகற்றினால் மற்ற வவ்வால்கள் அந்த பகுதிக்கு வந்து உயிரிழப்பதை தடுக்க முடியும். பழமையான மரங்கள் பல தீவிபத்தில் அழிந்து வருவதால் வவ்வால்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தீவிபத்துக்களில் மருதமரங்கள் அழிவதை தடுக்க வேண்டும்.

மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைத்தது போல, ஸ்ரீவைகுண்டம் பகுதியை பழந்தின்னி வவ்வால்கள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x