Published : 23 Jul 2023 04:10 PM
Last Updated : 23 Jul 2023 04:10 PM
பொள்ளாச்சி: இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை தமிழகம், கேரளா, கர்நாடகம், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 1.6 லட்சம் சதுர கிலோ மீட்டரில் பரவி கிடக்கிறது.
புவிஈர்ப்பு சக்தியைப் பொருட்படுத்தாது, செங்குத்தான மலைச்சரிவுகளிலும், பாறைகளிலும் புற்களை மேயும் வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டுமே வாழிடமாக கொண்டுள்ளன. ஆங்கிலேய உயிரியல் ஆய்வாளர் ஜான் எட்வர்டு க்ரே என்பவர் 1850-களில் வரையாடு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
ஆய்வில் ‘வரையாடு’ என்ற தமிழ் பெயரைத் தழுவி ஆங்கிலத்தில் அவற்றை ‘வரையடோ’ என குறிப்பிட்டுள்ளார். செங்குத்தான மலை உச்சிகளில் உள்ள பாறைகளில் எளிதாக சுற்றித்திரியும் தன்மையை உடையது வரையாடு. சிலப்பதிகாரத்தில், ‘வரையாடு வருடையும் மடமான் மறியும்’ என்ற வரிகளும், ‘ஓங்கு மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்துரு பெருந்தேன்’ என சீவக சிந்தாமணியிலும் வரையாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழகத்தின் மாநில விலங்காகவும் உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 1,200 - 3,000 மீட்டர் உயரத்திலுள்ள மலை முகடுகளில், புற்கள் நிறைந்த சோலைப் புல்வெளிகளில் ஒரு காலத்தில் பரவித் திரிந்த வரையாடுகள் தற்போது தமிழக கேரளா எல்லையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படுவதுடன் 2015- கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கையும் 3,200 க்கு கீழ் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, தேனி, மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், களக்காடு, முண்டந்துறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மட்டுமே வரையாடுகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்விட அழிப்பு, வேட்டை அச்சுறுத்தல் ஆகியவற்றால் தொடர்ந்து அழிவின் பாதையில் பயணித்து அருகி வந்த வரையாடுகள், 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டம் வந்த பின், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியல் 1-ல் சேர்க்கப்பட்டன. இதனால் வேட்டை அச்சுறுத்தல் குறைந்தது.
வரையாடுகளுக்கு கிட்டத்தட்ட 120 வகை செடிகள், புற்கள் உணவாகின்றன. செங்குத்தான பிடிப்பே இல்லாத மலை இடுக்குகள், பாறைகள் போன்றவற்றில் வளரக் கூடிய புற்கள், செடிகள், பாறைகளில் உள்ள தாதுக்களை உட்கொள்ள யாராலும் அடைய முடியாத உயர்ந்த மலை உச்சிகளில் இவை பயணிக்கின்றன.
மலை உச்சியில் மேகக்கூட்டங்களுடன் பெய்யும் மிதமான மழை, அவ்வப்போது தென்படும் வெயில் ஆகியவை வரையாடுகளின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலம் என்பதால், ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வரையாடுகளின் இனப்பெருக்க காலமும் தொடங்கும். ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை இனப்பெருக்க காலம் நீடிக்கும்.
பெண் வரையாடுகள் ஆண்டுக்கு இருமுறை குட்டிகளை ஈனும். பெரும்பாலும் ஒரேயொரு குட்டியை மட்டுமே ஈனும். அதில் வேட்டை விலங்குகளான சிறுத்தை, செந்நாய் ஆகியவற்றால் வேட்டையாடப்படுதல், இதர காராணங்கள் ஆகியவற்றால் 50 சதவீதம் மட்டுமே தப்பிப் பிழைக்கின்றன.
தேயிலைத் தோட்டங்கள், யூகலிப்டஸ் பயிரீடு, வனப்பகுதிக்குள் சாலைகள் ஆகியவற்றால் அவற்றின் வாழ்விடம் கிட்டத்தட்ட 124 பகுதிகளாக ஆங்காங்கே சிதறுண்டன. வாழ்விட அழிப்பு, புல்வெளிகளில் பரவிய தாவரங்களால் ஏற்படும் உணவு பற்றாக்குறை ஆகியவற்றால் வாழ்விடம் சுருங்குவதுடன் அவற்றின் நடமாட்டத்தையும் தடுக்கிறது. இதனால் வரையாடுகள் சிறுசிறு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக வாழ்கின்றன.
சிறு குழுவாக இருப்பதால் எளிதில் வேட்டை, நோய் தாக்குதல், காட்டுத்தீ ஆகியவற்றால் அழிந்து போகும் அபாயத்தைச் சந்திக்கின்றன. வரையாடுகளை பாதுகாக்க சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி நிலையில், தமிழக அரசு கடந்த ஆண்டு மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டது.
2022 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, வரையாடுகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு, 25.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரையாடுகளின் பாதைகள், அவற்றின் பரவல் ஆகிய தரவுகளைச் சேகரித்தல், ஆண்டுக்கு இருமுறை கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங்,
வரையாடுகள் முன்பு வசித்த இடங்களில் அவை மீண்டும் வாழ்வதற்கான சாத்தியங்களை உருவாக்குதல், சோலை புல்வெளிகளை மறு உருவாக்கம் செய்தல் என, பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது வரையாடுகள் வாழ்விடம் உள்ள வனப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் அவற்றின் பரவல் குறித்து வன உயிரியலாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது இயற்கை ஆர்வலர்களிடம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. வரையாடுகளின் முக்கியத்துவம் குறித்து வருங்கால தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT