Published : 23 Jul 2023 04:10 AM
Last Updated : 23 Jul 2023 04:10 AM
மசினகுடி: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட யானைகள் வழித்தடத்தில் வெட்டப்பட்ட சர்ச்சைக்குரிய அகழியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது மசினகுடி சரகம். இந்த சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா யானைகள் வழித்தடப் பகுதியில், யானைகள் உள்ளே நுழையாதபடி அத்துமீறி அகழி அமைக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டமான ‘100 நாள் வேலை திட்டத்தின்’ கீழ் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், பெண் பணியாளர்களை பயன்படுத்தி அகழி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதையடுத்து, அகழி தோண்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தியதோடு, அகழியை மூடவும் வனத்துறையினர் உத்தரவிட்டனர்.
முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறும் போது, ‘‘100 நாள் வேலை திட்டத்தின் பேரில், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதியான மாவனல்லாவில் யானைகள் வழித் தடத்தையொட்டி அகழி தோண்டியிருக்கின்றனர்.
இதனால் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா வன விலங்குகள் சரணாலயம், கூடலூர் உட்பட பல பகுதிகளுக்கு இடம் பெயரும் யானை உட்பட்ட வன விலங்குகளின் வழித் தடத்தில் தடை ஏற்படும். அகழி தோண்டும் பணியை நிறுத்தியிருக்கிறோம். அகழியை மூடவும் உத்தரவிட்டிருக்கிறோம்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT