Published : 22 Jul 2023 05:03 PM
Last Updated : 22 Jul 2023 05:03 PM

‘வனத்துக்குள் வலம் வரும் ஹெலிகாப்டர்’ - குன்னூரில் அதிகளவில் காணப்படும் இருவாச்சி!

பசுமை நிறைந்த காடுகளை பல்வேறு வகையான பறவைகள் தங்களின் வசிப்பிடமாகக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிகவும்முக்கியமானதாகக் கருதப்படுவது இருவாச்சி பறவைகள். கண்ணைக் கவரும் வண்ணங்களுடன், மனதைக் கவரும் வகையிலானவை இருவாச்சி பறவைகள்.

இது தனிப்பட்ட பறவையின் பெயரல்ல.இது கூட்டுக்குடும்பப் பெயராகும். உலகம் முழுவதும் இருவாச்சி குடும்பத்தில் 54 வகையான பறவை இனங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலை, அந்தமான் - நிக்கோபார் தீவுகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இருவாச்சி பறவைகளில் ஒன்பது வகைகள் உள்ளன.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சிஎன நான்கு வகைகள் காணப்படுகின்றன. இவை கம்பீரமும், அழகும் நிறைந்தவை. அவற்றின் அலகு மிகவும் நீண்டு பளிச்சென்ற வண்ணங்களாலானது. அந்த அழகிய அலகின் மேல் பகுதியில், ஒரு கொண்டை இருக்கும். இந்த கொண்டை, ஆண் பறவைகளுக்கு பெண் பறவைகளை ஈர்ப்பதற்கு பயன்படும்.

இருவாச்சிகள் பறக்கும்போது, அதன் சிறகுகள் அசைவில் எழும்பும் ஒலியானது, தூரத்தில் இருப்பவர்களுக்கு வனத்துக்குள் ஒரு ஹெலிகாப்டர் பறப்பதுபோல கேட்கும். அந்த ஒலியை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்க இயலும். உருவத்தில் பெரியதாகவும், கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களின் கலவையாக கண்ணை கவரும் பேரழகு பறவையாகவும் இவை வலம் வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், தற்போதுமிதமான காலநிலை நிலவுகிறது. இதனால் மலைப்பாதையிலுள்ள மரங்களில் பலாப்பழங்கள் மட்டுமின்றி, பறவைகளுக்கு தேவையான பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன.குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர். பகுதியில் அத்திப்பழ மரத்தில் பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளன.

இதனை தேடி, அரிய வகை பறவை இனங்கள் பல உலா வருகின்றன. குறிப்பாக, அத்திப் பழங்களை சுவைக்க தற்போது இருவாச்சி பறவைகள் அங்கு படையெடுத்துள்ளன. ஒரேமரத்தில் அங்கும், இங்கும் பறந்து அத்திப் பழங்களை சுவைத்து, தேவைக்காக பழங்களை சேகரித்துக் கொள்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து இருவாச்சி பறவைகள் வந்துசெல்வதால், மலைப்பாதையில் பயணிப்போரும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இருவாச்சி பறவைகள் குறித்து ஆய்வு செய்யும் கோத்தகிரியை சேர்ந்த ஆர்.கண்ணன் கூறும்போது, "இருவாச்சி பறவைகள் இனப்பெருக்க காலம் முடிந்து, தன் குஞ்சுகளுக்குபறப்பதற்கும், இரை தேடவும் கற்றுக்கொடுக்கும். ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அதிக அளவில் பழ மரங்களில் இவை காணப்படுகின்றன. பறக்கும்போது ஹெலிகாப்டர் போன்ற ஒலியுடன் பறக்கும்.

இதனை, ‘தாண்டி பறவை’ என பழங்குடியின மக்கள் அழைக்கின்றனர். வாழ்நாளில் ஒரே ஓர் இணையோடு மட்டுமே வாழும். தன் இணையை தேர்ந்தெடுக்க, அனைத்து பறவைகளைபோலவே உயர பறத்தல், கிளையை உலுக்கி நடனமிடுதல், அலகோடு அலகுஉரசுதல், ஆகிய செயல்களால் இணையை க்கவர்கிறது.

இனப்பெருக்க காலம் வந்ததும், ஆள் அரவமற்ற உயரமான மரங்களின் பொந்துகளில் பெண் பறவையை வைத்து வெளிப்புறம் மண், மரப்பிசின், பழக்கூழ் கொண்டு அடைத்துவிடும். மேல் புறம் ஆண் பறவை, பெண் பறவைக்கும் குஞ்சுகளுக்கும் உணவூட்டிவிட, கீழ் புறம் கழிவுகளை வெளியேற்ற என சிறிய இரண்டு துவாரங்களை மட்டும் விடுகிறது.

பெண் பறவையானது தன் சிறகுகளை உதிர்த்து மெத்தை போலாக்கி கூட்டுக்குள் குஞ்சுகளுக்கு அளிக்கிறது. குஞ்சுகள் பறக்க தயராகும் காலத்தில், ஆண் பறவை மரப்பொந்துக்கு வெளியே உள்ள அடைப்பை உடைத்து குஞ்சுகளை பறக்க பழக்க ஆரம்பிக்கும். அனைத்து வகையிலும் இருவாச்சி பறவை தனித்துவமானது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x