Published : 21 Jul 2023 03:57 PM
Last Updated : 21 Jul 2023 03:57 PM
மதுரை: அழியும் நிலையிலுள்ள மதுரை கட்டை மூக்கு புறாக்களை வளர்த்து பராமரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த இளை ஞர். இவர் வளர்த்த புறா தேசிய அள விலான பந்தயத்தில் பங்கேற்று சாம் பியன் பட்டத்தை வென்றது.
மன்னர்கள் காலத்தில் தகவல்களை கொண்டு சேர்க்க புறாக்கள் பயன்படுத்தப் பட்டன. அதன் வேகம், இடங்களை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளும் புத்திக்கூர்மை ஆகியவற்றால் மிகவும் நம்பகமான ‘தூதுவர்களாக’ புறாக்கள் திகழ்ந்தன. கால மாற்றத்தில் புறாக்களை தூது விடும் பழக்கம் காணாமல் போனது. ஆனாலும் புறா பந்தயங்கள் இன்றும் தொடர்கின்றன.
புறாக்களில் பல வகைகள் உள்ளன. அதில் ‘மதுரை கட்டை மூக்கு புறா’ தனித்தன்மை வாய்ந்தது. இப் புறாவின் கண்களை சுற்றி 2 வளையங்கள் இருக்கும். அது சதைப் பகுதியாக இருக்கும். மூக்கின் நீளம் மிகச்சிறியதாக இருக்கும். இதன் மூக்கின் அலகு வளைந்து காணப்படும். மூக்கின் முன்பகுதியில் இதய வடிவில் தசைகள் இருக்கும்.
தலைப்பகுதி தட்டையாக இருக்கும். இதன் நடை, ஆங்கில எழுத்தான ‘எல்’ வடிவில் இருக்கும். கட்டை மூக்கு புறாக்கள் தற்போது அழிந்து வரும் இனமாக உள்ளன. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதை வளர்த்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் மதுரை தத்தனேரி அருள் தாஸ்புரத்தைச் சேர்ந்த அ.சந்தோஷ் குமார் (40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் கடந்த 25 ஆண்டுகளாக இப்புறாக்களை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் கேரளா மாநிலம் திருச்சூரில் தேசிய அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புறாக்கள் பங்கேற்றன. சந்தோஷ்குமார் வளர்த்த மதுரை கட்டை மூக்கு புறா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அ.சந்தோஷ்குமார் கூறியதாவது: எனது தாத்தாக்கள் ஆறுமுகம், ராமசாமி ஆகியோர் மூலம் பறவை வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் மதுரையின் அடையாளமாக உள்ள ‘மதுரை கட்டை மூக்கு புறாக்கள்’ மீது கவனம் திரும்பியது. அழியும் நிலையிலுள்ள இப்புறாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறாக்களை வளர்த்து வரு கிறேன். தற்போது என்னிடம் 18 ஜோடி புறாக்கள் உள்ளன.
கட்டை மூக்கு புறா ரகங்களில் பல வண்ணங்கள் உள்ளன. என்னிடம் கருப்பு, சிவப்பு, சாம்பல் என 3 வண்ணங்களில் புறாக்கள் உள்ளன. தலைப்பகுதியில் இருந்து வால் பகுதி வரை ஒரே நிறத்தில் இருந்தால் தரமான புறாக்கள் என கருதப்படும் இப்புறாக்கள் சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு மற்றும் நவ தானியங்களை இரையாக உண்ணும்.
அதன் இருப்பிடங்களை சுத்தமாக பரா மரிக்க வேண்டும். ஒரு புறா 2 முட்டைகள் இடும். அதனை ஆண் புறா, பெண் புறா என மாறிமாறி அடைகாக்கும். சுமார் 3 மாதங்கள் வரை குஞ்சுகளை காத்து ஆளாக்கும். அழியும் நிலையிலுள்ள புறாக்களை பாதுகாக்கிறேன் என்ற திருப்தியுடன் இப்புறாக்களை வளர்த்து வருகிறேன். புறாக்களை பராமரிக்கும் பணியில் எனது பெற்றோர், மனைவி, மகள் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT