Published : 19 Jul 2023 12:56 PM
Last Updated : 19 Jul 2023 12:56 PM
புதுச்சேரி: புதுச்சேரி நகரில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.25 கோடி மதிப்பில், 2.5 ஏக்கரில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போது நகரின் அன்றாட நீர் தேவைக்காக 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு நாள் ஒன்றுக்கு 220 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆழ்துளை கிணறுகளில் தினமும் 16 முதல் 20 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதனால் புதுச்சேரி நகரில் நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் குடிநீர் தேவையோ அதிகரித்து வருகிறது. நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய புதுச்சேரி பொதுப் பணித்துறை மூலம் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் சோதனை அடிப்படையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.25 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு விரைவில் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளது. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக புதுச்சேரி அரசின் பொதுப் பணித்துறைக்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்க உள்ளது.
இது குறித்து புதுச்சேரி பொதுப் பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி நகர எல்லையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு எம்எல்டி குடிநீர் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். சுத்திகரிக்கப்பட்ட நீர் பிரத்யேகமாக குடிநீருக்காக பயன்படுத்தப்படும்.
இந்த குடிநீர் இந்திய தரநிலைக்கு (IS 10500 2012) இணங்க இருக்கும். இந்த ஆலைக்கு 500 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதன் மூலம் 1.75 லட்சம் மக்கள் தொகையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் நகரின் மேலும் சில இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் நிறுவுவதற்கும் அரசு தீர்மானிக்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT