Published : 15 Jul 2023 06:58 PM
Last Updated : 15 Jul 2023 06:58 PM

சூழல் மாசுபாடுக்கு வாய்ப்பளிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை தேவை: தருமபுரியில் எழும் குரல்

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் குப்பைத் தொட்டியில் தீ வைத்து எரிக்கப்பட்ட குப்பைகள்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வெப்ப மயம் மற்றும் சூழல் மாசுபாடு அதிகரிக்க வாய்ப்பளிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் 1 நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் மூலம் அந்தந்த பகுதிகளில் சுகாதார மேம்பாடு, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளும், வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், சுகாதாரப் பணிகளுக்கென உள்ளாட்சி அமைப்புகள் கணிசமான தொகையை செலவிடுகின்றன.

ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் நிறுவுதல், சேகரமான குப்பைகளை பணியாளர்கள் மூலம் வாகனங்களில் ஏற்றிச் செல்லுதல், கொசு உள்ளிட்ட தொற்று ஏற்படுத்தும் உயிரினங்களை கட்டுப்படுத்த மருந்து தெளித்தல் மற்றும் பிளீச்சிங் பவுடர் இறைத்தல் போன்றவை முக்கியமானவை. இவற்றில் குப்பைகளை கையாளும் பணிகள் தொடர்பாகத் தான் தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள, தகரத்தால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பணியாற்ற உதவியாக உள்ளன.

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சியில் தொடர்ந்து
எரிக்கப்படும் குப்பைகளால் துருப்பிடித்துக் கிடக்கும்
குப்பைத் தொட்டிகள்

ஆனால், இதுபோன்ற குப்பைத் தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை பல இடங்களில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவை எரியும்போது வெளியாகும் புகை மற்றும் நச்சுக்காற்றால் சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

மேலும், குப்பைகள் எரியும்போது வெளி யாகும் வெப்பம், புவிவெப்பநிலை அதிகமாகவும் காரணமாகிறது. சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களே குப்பைகளை இவ்வாறு கொளுத்தி விடும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்ற செயல்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

சூழல் மற்றும் வெப்ப மயமாதல் ஆகிய இரண்டும் பூமிக்கும், பூமியில் வசிக்கும் உயிரினங்களுக்கும் இன்று பெரும் சவாலாக மாறி வருகிறது. இந்நிலையில் அரசின் அங்கமான உள்ளாட்சி அமைப்புகளே இவைகளுக்கு காரணமாக இருப்பது வேதனை. எனவே, இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், குப்பைகளை கொளுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x