Published : 13 Jul 2023 03:10 PM
Last Updated : 13 Jul 2023 03:10 PM
வேலூர்: வேலூர் ஓட்டேரி ஏரிக்கரையில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் மக்காத குப்பை மலைபோல் தேங்கி நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் நகருக்கு ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த ஓட்டேரி ஏரி தற்போது பெரியளவில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. விருபாட்சிபுரம் ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை வேலூர் நகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தியபோது அந்த கோரிக்கை நிறைவேறியது.
கடந்த 2008-ம் ஆண்டு வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது அல்லாபுரம் பேரூராட்சி, பலவன்சாத்து, விருபாட்சிபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அதிகப்படியான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு முதலில் குப்பை கிடங்கு மட்டுமே பரிசாக கிடைத்தது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை ஓட்டேரி ஏரிக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்கும் குப்பையை தரம் பிரித்தவர்கள், மக்காத குப்பையை அப்படியே கொட்டி தேக்கி வைக்க ஆரம்பித்தனர். மக்காத குப்பையை கொட்டி, கொட்டி மலைபோல் தேங்கிவிட்டது.
குப்பை கிடங்கு பரிசாக கிடைத்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக நிலத்தடி நீரும் மாசடைய ஆரம்பித்துவிட்டது. ஓட்டேரி குப்பை கிடங்குக்கு அருகில் உள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியுள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 53, 54 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையுடன் 57-வது வார்டில் இருந்து வரும் மக்காத குப்பையும் ஓட்டேரி குப்பை கிடங்கில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கெனவே, ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் அங்குள்ள பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் காதலர்களின் புகலிடமாக மாறி வருகிறது. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அத்துடன் குப்பை கிடங்கும் அப்பகுதி மக்களுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அங்கு தேங்கிய மக்காத குப்பை மலையை அகற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இது குறித்து, 53-வது வார்டு கவுன்சிலர் பாபி கதிரவன் கூறும்போது, ‘‘மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பதாக கூறுகிறார்கள். மக்கும் குப்பையை பிரித்துவிட்டார்கள். மக்காத குப்பையை அப்படியே விட்டுவிட்டார்கள். மக்காத குப்பையை தூளாக்கும் இயந்திரம் பயன்படுத்தாமல் பாழாகிவிட்டது. அதை சீர் செய்ய பெங்களூருவில் இருந்துதான் வர வேண்டும்.
அதற்கும், அதிக செலவாகும் என்கிறார்கள். பயன்படுத்தாமலேயே சீரழிந்தது அந்த இயந்திரமாகத்தான் இருக்கும். தேங்கிய குப்பையால் நிலத்தடி நீர் மாசடைந்திருக்கிறது. அந்த நீரை மனிதர்கள் மட்டுமல்ல கால்நடைகள் கூட குடிக்க லாயக்கில்லாதது என என்சிசி மாணவர்களின் முகாம் நடந்தபோது தெரியவந்தது.
இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டதற்கு மாநகராட்சி நிர்வாகம்தான் காரணம். இதை கேட்டால் உங்களுக்கு ஏன்? அவ்வளவு அக்கறை என்கிறார்கள். எனது வார்டில் எனது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நான் தான் குரல் கொடுக்க முடியும். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக 53-வது வார்டுக்கு உட்பட்ட அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ ஏ.பி.நந்த குமாரிடம் கேட்டதற்கு, ‘‘ஓட்டேரி குப்பை கிடங்கை 8 மாதங்களுக்கு முன்பு நானும், அந்த வார்டின் கவுன்சிலர் மற்றும் அப்போதைய மாநகராட்சி ஆணையருடன் நடந்தே சென்று ஆய்வு செய்தோம். அங்குள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், அதற்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT