Published : 11 Jul 2023 04:17 PM
Last Updated : 11 Jul 2023 04:17 PM
திண்டுக்கல்: பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் காகிதத்தால் ஆன விதையுடன் கூடிய பேப்பர் பேனாக்களை தயாரிக்கும் பணியில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டயப்படிப்பு படித்த இளைஞர் சிவபாலன் (25). படித்து முடித்தவுடன் இவருக்கு ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தொழிலில் முதலீடு செய்ய அதிக பணம் தேவை என்பதால், சிறிய அளவில் முதலீடு செய்து தொழிலை தொடங்க நினைத்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கையில் பேப்பர் பேனா தயாரிக்கலாம் என்ற எண்ணம் வரவே, மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் கடன் பெற்று பேப்பர் பேனா தயாரிக்கும் தொழிலை தொடங்கினார். இதற்காக தனியாக வேலையாட்கள் வைத்துக் கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்களே பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து சிவபாலன் கூறியதாவது: ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். பால் பாய்ன்ட் பேனாக்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுபவையாக உள்ளன. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட எண்ணினேன்.
இது 98 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாதது. பேப்பர் பேனா பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் அது மக்கிவிடும். இதன் சிறப்பம்சமாக பேப்பர் பேனாவில் விதைகளை வைக்கிறோம். இந்த விதை முளைப்புத்திறன் பெற்று செடி, மரமாக வளர்ந்துவிடும். வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப பேப்பர் பேனாவில் வாசகம் அச்சிட்டு தருகிறோம். பிறந்தநாள், திருமண விழாக்களுக்கு பரிசுப் பொருட்களாக ஆர்டர் தருவோரின் பெயர் பிரின்ட் செய்து பேப்பர் பேனா தயாரித்து தருகிறோம்.
ஒரு பேனா ரூ.5-க்கு விற்கிறோம். வாழ்த்துகள் அச்சடித்த பேனா ரூ.10-க்கு விற்பனை செய்கிறோம். ஆன்லைன் மூலம் பள்ளிகளை தொடர்பு கொண்டும் விற்கிறோம். பேப்பர் பேனா மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படுவதுடன், அதில் இருக்கும் விதை மூலம் இயற்கை வளத்தையும் அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT