Published : 07 Jul 2023 03:59 PM
Last Updated : 07 Jul 2023 03:59 PM

வன மகோத்சவம் | காவேரி கூக்குரல் சார்பில் 3 மாவட்டங்களில் 9,000 மரங்கள் நடப்பட்டுள்ளதாக ஈஷா மையம் தகவல்

வன மகோத்சவத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட மரக்கன்றுகளுடன் விவசாயிகள்

சென்னை: தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் சுமார் 9,000 மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர் என்று ஈஷா மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’என்ற பெயரில் வன திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமான காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டில் 15 ஏக்கர் நிலத்தில் 5000 மரங்களும், காஞ்சிபுரத்தில் 5 ஏக்கரில் 1000 மரங்களும் மற்றும் திருவள்ளூரில் 7 ஏக்கர் நிலத்தில் 3000 மரங்களும் விவசாயிகளால் நடப்பட்டது.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் இதில் நடப்படுகின்றன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.

இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈஷா மூலமாக தமிழகம் முழுவதும் 2004 ம் ஆண்டு முதல் 8.85 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மரம்சார்ந்த விவசாயத்துக்கு 1,72,600 விவசாயிகள் மாறியுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் காவேரி கூக்குரல் 1,01,42,331 மரங்களை நடவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஒரு கோடியே பத்து லட்சம் மரங்களை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து நாற்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கரங்களுக்கு எளிதாக மரக்கன்றுகள் சென்று சேரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்று பண்ணையில் டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x