Published : 06 Jul 2023 03:26 PM
Last Updated : 06 Jul 2023 03:26 PM
கோவை: கோவை வனக்கோட்டத்தில் முதல்முறை யாக ‘எம்-ஸ்ட்ரைப்ஸ்’ (MSTRIPES) எனும் செல்போன் செயலி மூலம் புலிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள வனக்கோட்ட பகுதிகளை 2 சதுர கி.மீ வீதம் பிரித்து இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை, கோவை, மேட்டுப்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டுமாடு, மான், செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. புலிகள் நடமாட்டமும் இங்கு இருந்து வருகிறது. ஆனால், தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்புப் பணியின் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களில் மட்டுமே புலிகள் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இரு வனச்சரகங்கள் தவிர்த்து மற்ற இடங்களிலும் புலிகள் நடமாட்டம் உள்ளதால் செல்போன் செயலி, தானியங்கி கேமராக்கள் மூலம் அவற்றை கண்காணிக்கவும், எண்ணிக்கையை முழுமையாக அறிந்துகொள்ளவும் ‘டபிள்யு.டபிள்யு.எஃப்-இந்தியா’ (World Wide Fund for Nature-India) அமைப்புடன் இணைந்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மண்டல வனப் பாதுகாவலர் எஸ்.ராமசுப்பிரமணியன் கூறும்போது, “நாட்டில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களிலும் கட்டாயமாக ‘எம்-ஸ்ட்ரைப்ஸ்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை வனக்கோட்டத்தில் வனப்பணியாளர்கள் ரோந்து செல்லும் போது புலிகளின் கால்தடம், எச்சம் போன்றவற்றைபதிவு செய்ய ‘எம்-ஸ்ட்ரைப்ஸ்’ என்ற செயலியுடன், 50 செல்போன்களை டபிள்யு.டபிள்யு.எஃப் அமைப்பானது வனக்காப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த அமைப்பின் உதவி ஒருங்கிணைப்பாளர் என்.ரவிக்குமார், வனத்துறை உயிரியலாளர்கள் பீட்டர் பிரேம் சக்ரவர்த்தி, எம்.நவீன் ஆகியோர் வனப் பணியாளர்களுக்கு மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் பயிற்சி அளித்துள்ளனர். கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருத மலை சரக பகுதியில் தானியங்கி கேமராக்களை எப்படி பொருத்துவது, செயலியை பயன்படுத்தி எப்படி தகவல்களை சேகரிப்பது ஆகியவை குறித்து நேரடி செயல் விளக்கமும் வனப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை வனக்கோட்டத்தின் ஒவ்வொரு 2 சதுர கிலோ மீட்டரிலும் இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும். அதில் பதிவாகும் பதிவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில்ஆய்வு செய்யப்படும். அனைத்து வனச்சரகங் களிலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும்” என்றார்.மாவட்ட வன அலுவலர் என்.ஜெயராஜ் கூறும்போது, “எம்-ஸ்ட்ரைப்ஸ் செயலி மூலம் கிடைக்கும் தகவல்கள் முக்கிய முடிவுகளை எடுக்க பயனுள்ளதாக இருக்கும்”என்றார்.
‘டபிள்யு.டபிள்யு.எஃப்-இந்தியா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன் கூறும்போது,“எம்-ஸ்ட்ரைப்ஸ் செயலி மூலம் புலிகள்நடமாட்டம் மட்டுமல்லாது இதர வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள இடங்களை உடனுக்குடன் துல்லியமாக பதிவிட முடியும். வனப்பணியாளர்கள் கண்காணிப்புப் பணியை திறம்பட மேற்கொள்ள, செயலியில் பதிவாகும் தகவல்கள் அடிப்படையில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். தானியங்கி கேமராவில் பதிவாகும் புகைப்படங்கள், புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள உதவும்”என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT