Published : 03 Jul 2023 08:12 PM
Last Updated : 03 Jul 2023 08:12 PM
உலக வெப்பமயமாதல் நடவடிக்கைகளை கேலி செய்த காலம் மாறி இப்போது அதன் உண்மையான கோரமுகம் மனித இனம் அறவே சிந்திக்க முடியாத, தடுக்க இயலாதாக வகையில் உருவெடுத்து, பரவி வருகிறது. கரீபியன் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் நீண்ட கடற்கரைகளில் ‘சார்கஸும்’ (Sargassum) என்ற கடற்பாசி அலைகளோடு ஊர்ந்து கொண்டிருக்கிறது. நாம் அதைப் பார்ப்பதற்கு முன்பே அதன் நாற்றத்தை முகரலாம். அழுகிய முட்டையின் நாற்றத்தை கொண்டுள்ளது இந்த கடற்பாசி. இது கரையோரத்தில் ஒதுங்கி, கடல் நுரைகளையே காலி செய்து, பழுப்பு நிறப் போர்வைகள் போல மூடி, நீண்ட தூரம் பரவி, துர்நாற்றம் வீசுகிறது.
கிரேட் அட்லாண்டிக் ‘சார்கஸும் பெல்ட்’ என்று அழைக்கப்படும் பகுதியில் இவ்வகைக் கடற்பாசிகள் ராட்சத படகுபோல் வந்து குவிந்துள்ளன. இதிலிருந்து கொத்துக்களாக உடைந்து வருகின்றன கடற்பாசிகள். இது மெக்சிகோ வளைகுடாவுக்கும், ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைக்கும் இடையில் சுமார் 5,000 மைல்கள் (8,047 கி.மீ.) நீண்டு பரவியுள்ளது. இதனை விண்வெளியிலிருந்து கூட பார்க்க முடியும். இந்த சார்கஸும் கடற்பாசி குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது அட்லாண்டிக் கடற்பகுதிகளில் 13 மில்லியன் டன்கள் என்ற கணக்கில் வளர்ந்து, பரவி வருகிறது.
சார்கஸும் இப்படி வளர்வதும், பரவி வருவதும் அசாதாரணமானது அல்ல என்றாலும் புளோரிடா மற்றும் மெக்சிகோ கடற்கரைகளில் சார்கஸும் பெல்ட்டைப் பிளந்து கொண்டு கரையோரத்தில் வந்து குவியும் இவ்வகைக் கடற்பாசி வகை, இதனை உண்டு வளரும் படு பயங்கரமான பாக்டீரியாவுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்ததே நம் கவனிக்கத்திற்குரியது. மேலும் இதில் அபாயகரமானது என்னவென்றால், இவ்வகை பாசிகளில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகளும் கலந்திருப்பதே.
மேலும், இது உப்பு நீர் மற்றும் கடல் சூழல்களில் காணப்படும் பாக்டீரியாவின் ஒரு பெரிய இனமான விப்ரியோ என்னும் பாக்டீரியாக்களுடன் தொடர்புடையது. இது Vibrio Vulnificus என்ற பாக்டீரியாவுடன் தொடர்புடையது. உடலில் மிகவும் வேகமாகப் பரவி, உயிரைப் பறிக்கும் Necrotizing fasciitis என்ற பாதிப்புக்கு இட்டுச் செல்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். நம் உடலில் புண்கள், சிரங்குகள், சிராய்ப்புகள் என்று திறந்த புண்கள் இருந்தால் இந்த விப்ரியோ பாக்டீரியா எளிதில் உடலுக்குள் புகுந்து உயிரைப்பறித்து விடும் அபாயம் மிக்கது.
"இந்த விப்ரியோ மிகவும் ஆக்ரோஷமானது. சில நிமிடங்களில் பிளாஸ்டிக்கை தேடி ஒட்டிக்கொள்ளும் என்பதை எங்கள் ஆய்வின் மூலம் அறிந்து கொண்டோம்" என்று இந்த ஆய்வை வழிநடத்திய புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் உயிரியல் உதவி பேராசிரியர் டிரேசி மின்சர் கூறுகிறார்.
"இந்த நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக் உடன் சேர்ந்து தன்னை வளர்த்துக் கொள்ளவும், இரட்டிப்பாக்கிக் கொள்ளவும் கூடியது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் கண்டுபிடித்த மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், ஸோட் (Zot) மரபணுக்கள் எனப்படுவதன் தொகுப்பு பற்றியதாகும். இது குடலில் கசிவுகளை ஏற்படுத்தும் நோய்க்குறியைக் கொண்டது" என்கிறார் மின்சர்.
இந்த ஸோட் மரபணுக்களைச் சுமந்து செல்லும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள், குடல் குழாயின் ஊடுருவலை அதிகரிக்கின்றன. இது நாள்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என தெரிகிறது.
மேலும், இந்த மரபணுக்களைச் சுமந்து செல்லும் பாக்டீரியாவின் பயோஃபில்மில் மூடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் துண்டை ஒரு மீன் கவ்வினால், அது தொற்றுநோயாக மாறலாம். மீன்களை தொற்றினால் என்ன ஆவது? மீன்களை உண்ணும் மனித இனம் என்ன ஆவது? என ஆய்வாளர் மின்சர் மற்றும் அவரது குழுவினரால் கண்டுப்பிடிக்கப்பட்ட சில ஒட்டுமீன்களில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் வயிற்றுப்போக்கினால் விளையும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் சுற்றியுள்ள நீரை வளப்படுத்தக்கூடும். இதனால் ‘சார்கஸும்’ கடற்பாசி வளர்ச்சியும் தூண்டப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது ஒரு சுழற்சி.
கடற்பாசி -> பிளாஸ்டிக் -> ஒட்டுண்ணி பாக்டீரியா -> மீன் -> வயிற்றுப்போக்கு -> மீண்டும் சார்காஸும் -> மீண்டும் பாக்டீரியா என கட்டுப்படுத்த முடியாத வகையில் சுழற்சியைக் கொண்டது.
இப்படிக் கூறும்போது சார்கஸும் ஏன் தோன்றுகிறது என்ற கேள்வி எழுவது நியாயமே. இந்தக் கடற்பாசி திடீரென அதிகரித்து உள்ளதற்கான காரணத்தை விளக்க வல்லுநர்கள் முயற்சித்து வருகின்றனர். சார்காஸும் மிகுதியாக வெடித்துக் கிளம்பி பரவியது. புதிய இடங்களிலும் தோன்றத் தொடங்கியது காரணம் என தெரிகிறது.
இது பொதுவாக மத்திய அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள சார்காஸோ கடலில் காணப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை வரை சார்கஸும் படையெடுக்கத் தொடங்கியுள்ளது.
பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம்: சார்கஸும் வெப்பமான நீரில் வேகமாக வளரும். சுவாரஸ்யமாக, பருவநிலை மாற்றம் கடல் நீரில் விப்ரியோ பாக்டீரியாவின் பரவலுடன் தொடர்புடையது என்பதும் கவனிக்கத்தக்கது. வடக்கு அரைக்கோளத்தின் குளிர்கால மாதங்களில் மேற்கு ஆப்பிரிக்காவின் கடல் நீரில் ஊட்டச்சத்து நிறைந்த நீரின் அதிகரிப்பு சமீபத்திய சார்கஸும் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சஹாரா பாலைவனத்தில் இருந்து வரும் தூசி மேகங்கள் அட்லாண்டிக் முழுவதும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல முடியும். ஆனால், தூசிப் புயல்கள் அதிகரித்து வருகின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளன. மேலும் சில ஆய்வுகள் காலநிலை மாறும் போது சஹாராவில் அவை அடிக்கடி நிகழாவிட்டாலும் நிகழும்போது பெரிய அளவில் நிகழும் என்பதும் சார்கஸும் பரவலுக்கு ஓர் காரணியாகக் கூறப்படுகிறது.
‘இது மூன்று வெவ்வேறு கண்டங்களை பாதிக்கிறது’ என்று ராயல் நெதர்லாந்து கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் நுண்ணுயிரியலாளர் லிண்டா அமரல்-ஜெட்லர் தெரிவித்துள்ளார்.
"பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் கரீபியனில் உள்ள பல தீவு நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன" அவர் தெரிவித்துள்ளார்.
பாசிகள் அழுகும் போது ஹைட்ரஜன் சல்பைடு வெளியேற்றப்படுவதால் அழுகிய முட்டைகளின் துர்நாற்றம் உருவாகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும். சார்கஸும் கடற்கரையின் முழுப் பகுதிகளையும் போர்வையாகப் போர்த்தி, பார்வையாளர்களுக்கு விரும்பத்தகாத வகையில் மாற்றி வருகிறது.
விப்ரியோ பாக்டீரியாக்கள் "சந்தர்ப்பம் பார்த்து தொற்றும் நோய்க்கிருமிகள்" என்று அமரா-ஜெட்லர் தெரிவித்துள்ளார். வெட்டுக்காயம் திறந்த நிலையில் இருந்தால் போதும், பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று ஆக்கிரமிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று விளக்குகிறார்.
"உங்கள் உடலில் காயம் இருந்தால், சார்கஸும் கடற்பாசி மீது நடக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அதனுள் நோயை உண்டாக்கும் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை அலட்சியமாகக் கடந்து சென்று விட வேண்டாம்” என்று எச்சரிக்கிறார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 80,000 நோய் பாதிப்புகளுக்கும், 100 இறப்புகளுக்கும் விப்ரியோசிஸ் காரணமாகிறது என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடல் நீர் சில அபூர்வ நோய்களைத் தீர்க்கும் அபூர்வ சக்திகள் நிறைந்தது என்ற கருத்தை விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.
உறுதுணைக் கட்டுரை: பிபிசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT