Published : 30 Jun 2023 06:49 PM
Last Updated : 30 Jun 2023 06:49 PM
புதுச்சேரி: ஒதியம்பட்டு - திருக்காஞ்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது என்று நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக அப்பகுதியில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஒதியம்பட்டு - மணவெளி ரோடு சந்திப்பில் இருந்து, திருக்காஞ்சி புதிய பாலம் வரை செல்லும் சாலையில் அட்டை, தோல் உள்ளிட்ட பல தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து அதிகளவில் புகை மற்றும் துர்நாற்றம் வெளியேறி வருகிறது.
குறிப்பாக இப்பிரச்சினை மாலை தொடங்கி இரவு நேரத்திலும் நீடிக்கிறது. இதனால் ஒதியம்பட்டு - திருக்காஞ்சி சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக் குள்ளாகின்றனர். “குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. தொடர்ந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும அதிகாரிகளிடம் கேட்டபோது, “தொழிற்சாலைகள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்கும் முன்பாகவே எங்கள் துறை மூலம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்குச் சென்று சோதனை மேற்கொள்வோம். அதோடு, குறிப்பிட்ட பகுதி குறித்து எங்களிடம் புகார் வந்த அடுத்த நாளே சென்று ஆய்வு செய்வோம்.
தொழிற்சாலைகளில் புகை வருவது வழக்கம் தான். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வந்தால் ஆய்வு செய்து அறிக்கை வந்தவுடன் அதற்கு ஏற்பட நடவடிக்கை எடுப்போம். தாங்கள் குறிப்பிடும் பகுதியில் உரிய கள ஆய்வு செய்து, அறிகை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT